உலக நாடுகள் ஆவலோடு காத்திருந்த அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று தொடங்கியுள்ளது. பல மாகாணங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்கூட்டியே வாக்குப்பதிவு செய்யும் முறையை பயன்படுத்தி 9 கோடியே 80 லட்சம் பேர் ஏற்கெனவே வாக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், அதிபர் தேர்தல் வாக்கெடுப்பில் ஏதேனும் குழப்பங்கள் ஏற்படும் பட்சத்தில், இறுதி முடிவை நாங்கள்தான் எடுப்போம் என அமெரிக்க நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி கூறுகையில், "சட்டம் என்ன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவை எண்ணுவதில் நாடாளுமன்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. நாங்கள் தயாராக இருக்கிறோம். அதிபரின் பொறுப்பற்ற தன்மை, அரசியலமைப்பின் மீதான அவமரியாதை, தேர்தல்களின் நேர்மை ஆகியவற்றைப் கடந்த சில நாள்களாக பார்த்து வருகிறோம். வாக்குப்பதிவு எண்ணுவதில் சர்ச்சை அல்லது இழுப்பறி ஏற்பட்டால், அதிபர் யார் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.