உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸ் பரவிவரும் அதே வேகத்தில் தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளும் முழுவீச்சில் நடந்துவருகின்றன. ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன. தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் 11 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை ஒரு கோடியே 55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி 100 விழுக்காடு செயல்திறன் கொண்டது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. நோய்த்தொற்று தீவிரமாக உள்ளவர்களுக்கும் இந்தத் தடுப்பூசி பயனளித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தங்களது தடுப்பூசியை அவசரத் தேவைக்குப் பயன்படுத்த அனுமதியளிக்குமாறு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடமும் ஐரோப்பிய நாடுகளின் சுகாதாரத் துறையிடமும் மாடர்னா நிறுவனம் அனுமதி கோரியிருந்தது.
மாடர்னா நிறுவன தடுப்பூசிக்கு அனுமதி
இந்நிலையில் மாடர்னா நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி அவசரப் பயன்பட்டிற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 'மாடர்னா தடுப்பூசி தற்போது கிடைக்கும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார். ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.