அமெரிக்கா: அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியா போலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட். இவர், கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி கடையொன்றில் பொருள்களை வாங்கிவிட்டு பணம் செலுத்தியுள்ளார். அதில், 20 டாலர் கள்ளநோட்டு இருந்ததாக கடை ஊழியர்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
ஃப்ளாய்ட் மரணம்
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஜார்ஜ் பிளாய்டை காவல்துறை வாகனத்தில் ஏற்ற முயன்றுள்ளனர். ஃப்ளாய்ட் ஏற மறுத்ததால், அவரை தரையில் தள்ளிய காவல் அலுவலர் டெரிக் சாவின் ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தில், தனது முட்டியை வைத்து அழுத்தியுள்ளார். இதில், மூச்சுவிடமுடியாமல் தவித்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் 'என்னால் மூச்சுவிட முடியவில்லை' என கெஞ்சியும் அந்தக்காவலர் தனது காலை எடுக்கவில்லை. தொடர்ந்து 9 நிமிடம் ஜார்ஜ் பிளாய்டின் கழுத்தில் டெரிக் சாவின் அழுத்தியதால், ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்தார்.
நிறவெறிக்கு எதிரான போராட்டம்
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. நிறவெறியினால்தான் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதாக கூறி அமெரிக்காவில் போராட்டம் வெடித்தது. அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் மனிதநேயவாதிகள், சமூக செயற்பட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜார்ஜ் பிளாய்டின் மரணத்திற்கு நீதிகேட்டு அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
40ஆண்டுகள்வரை சிறைதண்டனை
12 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. ஜார்ஜ் பிளாய்டின் மரணத்தின்போது சாலையில் இருந்தவர்கள், காவல் அலுவலர்கள், மருத்துவ நிபுணர்கள் என பல சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. விசாரணையின் முடிவில், டெரிக் சாவின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். தண்டனை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.
மினசோட்டா மாகாணத்தின் தண்டனைச் சட்ட வழிகாட்டுதல்கள் படி, முதல் முறையாக குற்றவியல் சட்டத்தில் டெரிக் சாவின் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், 12.5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். இருப்பினும், வேண்டுமென்றே தாக்குதல் நடத்துவது, மோசமான மனதுடன் கொலை செய்வது போன்ற குற்றச்சாட்டுகள் டெரிக் மீது இருப்பதால் அவருக்கு 40 ஆண்டுகள்வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
தீர்ப்பை வரவேற்ற ஜோ பைடன்
இந்த தீர்ப்பு மட்டும் போதாது எனவும் நாங்கள் உண்மையான மாற்றத்தையும், சீர்திருத்தத்தையும் வழங்கவுள்ளோம் எனவும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்த தீர்ப்பை வரவேற்றுப் பேசியுள்ளார். இதுமட்டுமில்லாமில், அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்டோரும் இத்தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.
மருத்துவர்களின் அறிக்கைகள்
இதயநிபுணர், நுரையீரல் நிபுணர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது அவர்கள் சமர்பித்த அறிக்கைகள், டெரிக் சாவின் தனது காலை அழுத்தி ஜார்ஜ் பிளாய்டை மூச்சுவிடமுடியாமல் செய்ததே அவரின் மரணத்திற்கு காரணம் என்பதை நிரூபித்தன. டெரிக்கின் வழக்கறிஞர், சாதரணமாக ஒரு காவல் அதிகாரி செய்வதைத்தான் டெரிக் செய்தார் எனவும், காரில் இருந்து வெளியேறிய புகையால் அவர் மூச்சுவிட சிரமமடைந்து மரணமடைந்திருக்கலாம் எனவும் வாதிட்டார்.
நேரடி சாட்சியங்கள்
டார்னெல்லா ஃப்ரேஷியர் என்ற பதின்வயது பெண் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை செய்த சம்பவம் குறித்த சாட்சியத்தை அளித்தார். காவல் அலுவலர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மீது காலை வைத்து அழுத்தியதை வீடியோவாக இவர் எடுத்து வெளியிட்டது போராட்டங்களுக்கு வித்திட்டது குறிப்பிடத்தக்கது.
இன்னபிற நேரடி சாட்சியங்களும், ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை விவரித்தனர். இதில், ஒருவரான ஜார்ஜ் ஃப்ளாய்டின் காதலி ரோஸ், தங்களது முதல் முத்தத்தையும், ஓப்பியம் என்ற போதைப்பொருளுக்கு எதிரான தங்களுடைய போராட்டங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அமெரிக்க ஊடகங்கள் இந்த வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்தன.
இதையும் படிங்க: நடந்தது என்ன? ஆப்பிரிக்க அமெரிக்கர் கொல்லப்பட்டது குறித்த வீடியோ வெளியீடு