உலக அளவில் 190க்கும் மேற்பட்டுள்ள நாடுகளை பாதித்துள்ள கரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. கரோனாவால் இதுவரை உலகளவில் மொத்தம் 5 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நோயை உலகப் பெருந்தொற்றாக அறிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு உலக நாடுகள் ஒன்றிணைந்து கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் தங்களை தயார்படுத்திக்கொள்ளவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடுகளும் லாக் டவுன் என்னும் பரிசோதனை முயற்சியில் களமிறங்கியுள்ளன. அதேவேளை, உலகில் பின்தங்கிய நாடுகளிலுள்ள லட்சக்கணக்கான மக்களின் நிலைமை பெரும் கவலையை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
உலகின் அனைத்து உயிர்களையும் ஒன்றாக நினைத்து மனித குலத்தை காக்க கரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என ஐநா பொதுச்செயாலளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவைப் போல் இங்கிலாந்திலும் 'கரோனா கைத்தட்டு'