வாஷிங்டன்: ஜார்ஜியா மாகாணத்தின் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான மார்ஜோரி டெய்லர் கிரீன் தனது ட்விட்டர் கணக்கு எவ்வித விளக்கமும் இன்றி முடக்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
46 வயதான தொழிலதிபர் மார்ஜோரி டெய்லர் கிரீன் அரசியலுக்கு புதுமுகம் ஆவார். பழமைவாத கருத்துகளை ஆதரிக்கும் இவர் ட்ரம்பின் தீவிர விசுவாசி ஆவார். அமெரிக்காவின் தீவிர வலதுசாரி கோட்பாடான QAnon ஐ ஏற்றுக்கொண்டவர்.
இந்நிலையில், மார்ஜோரி டெய்லர் கிரீன் ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு முன்னர், உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இருந்து ஒரு காணொலியை வெளியிட்டார்.
ஜார்ஜியா தேர்தல் அலுவலர்களைக் கண்டிக்கும் வகையில் அமைந்திருந்த அந்தக் காணொலி, மாகாணத்தில் பரவலாக தேர்தல் மோசடிகள் நடந்தன என்ற குற்றஞ்சாட்டுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்திருந்தது.
மேலும் ட்விட்டர் சம்பந்தப்பட்ட சில ஸ்கீன் ஷாட்களையும் மார்ஜோரி டெய்லர் கிரீன் பகிர்ந்தார். இதையடுத்து அவரின் கணக்கை ட்விட்டர் 12 மணி நேரம் தற்காலிகமாக நிறுத்திவைத்தது.
இதையடுத்து அனைவரும் தங்களின் கருத்தை தெரிவிக்க உரிமையுள்ளது. பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.
அமெரிக்க நாடாளுமன்ற வன்முறைக்கு பின்னர், QAnon என்ற பரப்புரை அமெரிக்காவில் வலுப்பெற்றுவருகிறது. இதையடுத்து ட்விட்டர் நிறுவனம் இதனுடன் தொடர்புடைய 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக முடக்கியுள்ளது.
முன்னதாக ட்ரம்ப் கணக்கையும் ட்விட்டர் நிறுவனம் நிரந்தரமாக முடக்கியது. இந்நிலையில் அவரது ஆதரவாளர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக கிரீன் கணக்கு இடைநீக்கம் தொடர்பான கருத்துக்கு ட்விட்டர் நிறுவனம் உடனடியாக பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வன்முறையை தூண்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது - ட்விட்டர் சிஇஓ