சான் பிரான்சிஸ்கோ: ட்ரம்பின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறித்து ட்விட்டரின் தலைமை நிர்வாக அலுவலர் ஜாக் டோர்சே கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்றதை ஏற்காத ட்ரம்ப், தனது ஆதரவாளர்களுடன் வெள்ளை மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியதில், ட்ரம்ப் ஆதரவாளர்கள் 5 பேர் காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ட்ரம்ப், தனது ஆதரவாளர்களை தூண்டும் விதமாக தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டார்.
அந்த வீடியோ வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது என ட்விட்டர் நிர்வாகம் அப்பதிவை நீக்கியதுடன், ட்ரம்பின் ட்விட்டர் பக்கத்தையும் முடக்கியது. ட்விட்டர் நிர்வாகத்தை கடுமையாக சாடியிருந்தார் ட்ரம்ப். தற்போது ட்விட்டர் தலைமை நிர்வாக அலுவலர் ஜாக் டோர்சே, ட்ரம்ப் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், பொதுமக்கள் நலன் கருதியே ட்ரம்பின் ட்விட்டர் பக்கத்தை முடக்கினோம். அதில் கொண்டாடவோ பெருமைப்படவோ ஒன்றுமில்லை. அந்த நேரத்தில் ட்ரம்பின் ட்விட்டர் பக்கத்தை முடக்குவது சரி என நினைத்தோம், முடக்கினோம். எங்கள் நிறுவனம் ஆரோக்கியமான விவாதங்களை வளர்க்க விரும்புகிறது. வன்முறையை தூண்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றார்.