உலகளவில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. உலகளவில் ஒரு கோடியே 65 லட்சத்து 36 ஆயிரத்து 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் அமெரிக்காவில் மட்டும் 43 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ. பிரையனுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ராபர்ட்டுக்கு கரோனா தொற்றுக்கான லேசான அறிகுறிகள் இருப்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது. அவர் பாதுகாப்பான இடத்தில் சுய தனிமைப்படுத்துதலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அவரால் அதிபருக்கோ துணை அதிபருக்கோ எவ்வித ஆபத்தும் இல்லை எனவும், தேசிய பாதுகாப்புக் குழுவின் பணி தடையின்றி தொடர்ந்து நடைபெறுவதாகவும் கூறியுள்ளது.
ராபர்ட் ஒரு குடும்ப நிகழ்வில் பங்கேற்றதால் அவருக்கு கரோனா பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.