அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் தேர்வாகியுள்ளார். அதேபோல், துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெற்றிப்பெற்றுள்ள போதும் அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதிதான் முறைப்படி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். ஆனால், தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், தேர்தல் பரப்புரையின்போது அவ்வப்போது வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் சந்தித்து கலந்துரையாடி வந்துள்ளனர். அதில் பங்கேற்ற வெள்ளை மாளிகை பணியாளர்களின் தலைவரான மார்க் மெடோஸூக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் வெள்ளை மாளிகையில் அரங்கேறிய பல்வேறு தேர்தல் பரப்புரை கூட்டங்களின் போது இடம் பெற்றிருந்தார்.
மேலும், அதில் பெரும்பாலானோர் முகக்கவசம் இல்லாமலும் தகுந்த இடைவெளியை பின்பற்றாமலும் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, கரோனா தொற்று பலருக்கு பரவியிருக்க வாய்ப்புள்ளதால், பலரை வெள்ளை மாளிகை அலுவலர்கள் தனிமைப்படுத்தியுள்ளனர். அவர்கள் குறித்த பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. கரோனா பாதிப்பான நபர்களுடன் 15 நிமிடங்கள் கலந்துரையாடியவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என வெள்ளை மாளிகை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.