அமெரிக்காவில் தற்போதைய கொண்டாட்டங்கள் 46ஆவது அதிபராக பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மகிழ்ச்சியான ஆரவாரமாகத் தெரியலாம். அமெரிக்காவின் இந்த அதிபர் தேர்தல் பல்வேறு சாதனைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதவியிலுள்ள அதிபர் தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றிபெறத் தவறிய முதல் தேர்தல் இதுதான்.
பராக் ஒபாமா கடந்த 2008ஆம் ஆண்டில் 69.5 மில்லியன் வாக்குகளைப் பெற்று அதிபரான சாதனையை, 75 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பைடன் இந்த ஆண்டு முறியடித்துள்ளார். கரோனா காரணமாக இந்தத் தேர்தலில் பல மாநிலங்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான தடைகளைத் தளர்த்தியதால், தபால் மூலம் அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டன. அதிக எண்ணிக்கையிலான தபால் வாக்குகளினால் சில மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் முக்கியச் செய்தி நிறுவனங்களாலும் நவம்பர் 7ஆம் தேதி வரை வெற்றி வேட்பாளரை யூகிக்க முடியவில்லை.
மிக முக்கியமாக, அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். இது போன்ற சாதனைகள் குறிப்பிடும்படியாக இருந்தபோதிலும், 46ஆவது அதிபர் தேர்தலில் கருத்து கணிப்பாளர்களால் எதிர்பார்க்கப்பட்ட உறுதியான முடிவு ஏதும் நடக்கவில்லை.
2016 மற்றும் 2020க்கு இடையில் ட்ரம்ப் தனது கொள்கைக்கான ஆதரவை விரிவுபடுத்தியது வாக்களிக்கும் முறையில் பிரதிபலித்தது. 2016 அதிபர் தேர்தலில் டிரம்ப் 62,984,828 வாக்குகளைப் பெற்றார். இது மொத்த வாக்குகளில் சுமார் 46% ஆகும். 2020ஆம் ஆண்டில் ட்ரம்பிற்கு ஆதரவாக வந்த வாக்குகள் 71,098,559ஆக அதிகரித்துள்ளது, இது மொத்த வாக்குகளில் சுமார் 48% ஆகும். (இந்தக் கட்டுரை எழுதப்படும் சமயத்தில் ஏறக்குறைய 93% வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.) 46ஆவது அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வி அடைந்தபோதிலும், ட்ரம்பிசத்திற்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
2020ஆம் ஆண்டு அமெரிக்க செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினரின் வெற்றி தனித்து காணப்படுகிறது. குடியரசுக் கட்சி 18 இடங்களை வென்றுள்ளது, இதன் மூலம் அமெரிக்க செனட் சபையில் அதன் பலம் 48 இடங்களாக உள்ளது. ஜனநாயகக் கட்சி 13 இடங்களை வென்று செனட்டில் 46 இடங்களைப் பிடித்துள்ளது. இரண்டு இடங்களை சுயேச்சைகள் பெற்றுள்ளனர். பெரும்பான்மைக்கு 51 இடங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது அமெரிக்க செனட்டின் விதி. ஜார்ஜியாவில் நடந்த இரண்டு தேர்தல்களில் எந்தவொரு கட்சியும் பதிவான வாக்குகளில் 50% அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற முடியவில்லை.
2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கான திட்டமிடப்பட்ட தேதியான 2020 நவம்பர் 3ஆம் தேதி, வாக்காளர்களிடையே ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் நடைபெற்ற ட்ரம்ப்பின் பரப்புரை, ஊடக ஆய்வாளர்கள், கருத்துக் கணிப்பாளர்கள் இடையே பெரும் பாராட்டைப் பெற்றது.
அமெரிக்கா, ஒரு தேசமாகத் தொடங்கப்பட்டதிலிருந்து அமெரிக்க அரசியலின் ஒரு பகுதியாக இருந்த சித்தாந்தத்துடன் அவர் இணைந்தார். இதன் விளைவாக ஆதரவாளர்களின் பெரும் எண்ணிக்கையிலான வாக்குகளை ட்ரம்ப் பெற்றார். இனம், பாலினம், வர்க்கம், அறிவியல் போன்றவற்றில் ஆழ்ந்த பழமைவாத சிந்தனை, நம்பிக்கை, கருத்துக்கள் ஆகியவற்றைக் கொண்ட கலவை தான், ’ட்ரம்பிசம்’.
ட்ரம்ப் இந்த புதுமை-பழமைவாத சூழலை உருவாக்கவில்லை, ஆனால் தனக்கு சாதகமாக அவற்றைப் பயன்படுத்திக் கொண்டார். இந்த யோசனைகளை அமெரிக்கர்களிடம் கடத்தும் பாலமாக அவர் இருந்தார். புதுமை-பழமைவாத அரசியலின் கூறுகள் அமைப்புகள், குழுக்களால் அமைக்கப்படுகிறது. அவர்களுக்கு இடையே முறையான உறவுகளை ஏற்படுத்துவது கடினம். அவை மேலே குறிப்பிட்டுள்ள சித்தாந்தத்தை கடைப்பிடிப்பதைத் தவிர பரவலாக வேறுபட்ட கோட்பாடுகளையும் கடைப்பிடிக்கின்றன.
ஒரு புறம், இது போன்ற அமைப்புகளின் பக்கம் அங்கீகரிக்கப்படாத தலைவர், அரசியல் மையம் அல்லது கட்டமைக்கப்படாத குழுக்கள் உள்ளன. அத்தகைய குழுக்களுக்கு வலதுசாரி QAnon அமைப்பு ஒரு பொதுவான எடுத்துக்காட்டு. மறுபுறம், வெள்ளை ஆதிக்கவாதிகள் மற்றும் தீவிர வலதுசாரிகளின் ரகசியமான, மிகவும் ஒழுக்கமான மற்றும் படிநிலை ரீதியாக கட்டமைக்கப்பட்ட குழுக்கள் உள்ளன. இறுதியாக வானொலிப் பேச்சு நிகழ்ச்சிகள், கேபிள் செய்திகள் மற்றும் தீவிர வலதுசாரி வலைத்தளங்களான ப்ரீட்பார்ட் நியூஸ், வலைத்தளம் ஆகியவை கருத்தியல் வலதுசாரிக்கான தளமாகும்.
இந்தத் தளங்களினால் குடியரசுக் கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் கணிசமான விகிதம் கிடைத்தாலும்கூட, புரிந்துகொள்ள முடியாத சித்தாந்தமும் அதனுடன் இணைந்த குழுக்களும் கட்சியின் ஒரு பகுதியாகவோ (அ) அதன் கட்டுப்பாட்டிலோ இல்லை. மிகப் பழமையான கட்சியுடன் மாற்றத்தை விரும்பாதவர்களை முற்றிலும் இணைத்தது ட்ரம்ப்பிசம்.
இங்கே, குடியரசுக் கட்சி மீது ட்ரம்ப் வைத்திருக்கும் கட்டுப்பாட்டிற்கான அடிப்படை தெரிகிறது. தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும், ட்ரம்பும் அவரது நம்பகமான தளபதிகளும் கட்சியின் முக்கியப் பதவிகளில் நிச்சயமாக இருப்பார்கள். ஜனநாயகக் கட்சியினருடனும் மற்ற எதிராளிளுடனும் மோதல் போக்கைத் தொடர இது உதவும். சுருக்கமாகச் சொன்னால், ட்ரம்ப்பின் அதிபர் பதவியின் தனிச்சிறப்பாக இருந்தது அவருடைய பிளவு அரசியல். அவரது தேர்தல் தோல்விக்குப் பிறகும் இது நீடிக்கும்.
அமெரிக்காவின் முறையான அரசியல் கட்சிகளில் குறிப்பிடத்தக்க பிறழ்வுகளைக் கணக்கிடாமல், அங்குள்ள அரசியல்ரீதியான எந்தவொரு பகுப்பாய்வும் முழுமையடையாது. குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டிலும் குறிப்பிடத்தக்க பிளவுகள் உருவாகியுள்ளன. 2016 முதல் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி இரண்டிலும் மாற்றத்தை விரும்பாதவர்கள் கட்சியின் தீவிரவாதப் பிரிவினரால் ஒதுக்கப்படும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்.
இடதுசாரிகளிடமிருந்து அதிகரித்து வரும் சவாலை ஜனநாயகக் கட்சி எதிர்கொள்கிறது. சமூக-அரசியல், பொருளாதார சீர்திருத்தங்கள் போன்றவை பனிப்பாறைகளாக உருகும்வேகத்தில் அதிகரித்து வருகின்றன. பெர்னி சாண்டர்ஸ், 2018 ஐக்கிய-அமெரிக்க பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நியூயார்க்கின் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ், மினசோட்டாவின் இல்ஹான் உமர், மாசசூசெட்ஸின் அயன்னா பிரஸ்லி மற்றும் மிச்சிகனின் ரஷிதா தலேப் ஆகிய நான்கு பெண்களால் உருவான குழு, கட்சியின் ஜனநாயகக் கட்சியின் இடதுசாரி ஆர்வத்தையும் விருப்பங்களையும் வெளிப்படுத்தி வருகிறது.
இந்தக் குழு ஏற்கனவே ஜனநாயகக் கட்சியின் முக்கிய இடத்தை ஆக்கிரமிக்க இரண்டு முறை முயன்று தோல்வியை சந்தித்தது. இந்தக் குழு காவல் துறை, மருத்துவ, கல்வி சீர்திருத்தங்கள், ஊதியக் கட்டமைப்பின் மாற்றங்களின் பின்னணியில் ஊக்கமளிக்கும் சக்தியாக இருந்தது.
மாற்றத்தை விரும்பாத வலதுசாரி கருத்தியல் கொள்கைகளால் குடியரசுக் கட்சி ஏற்கனவே வெற்றியடைந்துள்ளது. பழமைவாதிகளின் இந்த சரணடைதலின் அறிகுறி, ஆபிரகாம் லிங்கனின் கட்சி சமீபத்தில் அமெரிக்க அரசியலில் கூட்டமைப்பு சித்தாந்தத்தின் மிச்சங்களுக்கான வாகனமாக மாறியுள்ளது. இரு கட்சிகளிலும் மாற்றத்தை ஆதரிக்காதவர்கள் இந்த சவாலை எதிர்கொள்வதில் தங்களது திறமையின்மையைக் காட்டியுள்ளனர்.
செனட், அதிபர் தேர்தலில் சில முக்கியமான இழுபறி, மாநிலங்களில் வாக்களிக்கும் போக்குகளில் இருந்து ட்ரம்பின் தேர்தல் தோல்விக்கு மாற்றத்தை விரும்பாத பழமைவாதத்திற்கும் பங்கு உண்டு என்பதை விளங்கிக் கொள்ள முடிகிறது. குடியரசுக் கட்சி ஆதரவாளர்களான மறைந்த ஜான் மெக்கெய்ன், மிட் ரோம்னி ஆகியோரின் செல்வாக்கு காரணமாக அரிசோனா, மாசசூசெட்ஸ் பகுதிகளில் பைடனின் வெற்றி சாத்தியமானது.
இந்தச் சவாலின் விளைவு என்னவென்றால், ஜனநாயகக் கட்சியினர் இடதுசாரிகளின் சீர்திருத்தங்களை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், வலதுசாரியினர் குடியரசுக் கட்சியினரை கலாச்சாரப் போர்களின் அரசியலை நோக்கித் தள்ளுகின்றனர்.
பைடனின் அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், அமெரிக்க உள்நாட்டு அரசியலில் இந்த வளர்ந்துவரும் பிளவை சரிசெய்வது கடினம். தொற்றுநோய் பரவல் காலத்திலும்கூட முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் வாக்களித்ததை பைடன் நிர்வாகத்தால் புறக்கணிக்க முடியாது. பைடன் நிர்வாகத்தின் கரோனா தொடர்பான பொது சுகாதார நடவடிக்கைகள், காவல் துறை சீர்திருத்தங்கள், குறிப்பாக கறுப்பின சமூகங்கள் மீதான சமமற்ற காவல் துறை நடவடிக்கை குறித்த வளர்ந்து வரும் உணர்திறனை எதிர்கொள்வது, குடியேற்ற விதிமுறைகளை தளர்த்துவது போன்றவை உணர்ச்சிபூர்வமாக கடுமையான போராட்டங்களைத் தூண்டும் திறன் கொண்டவை.
அமெரிக்காவை உருவாக்கியவர்கள் அதனை உலகத்திற்கான சுதந்திரத்தின் கலங்கரை விளக்கமாகவும், ஒரு மலையில் பிரகாசிக்கும் நகரமாகவும் காட்சிப்படுத்தியிருக்கலாம். ஆனால் தற்போதைய கொந்தளிப்பான காலங்களில் அது வீட்டைச் சுற்றி நெருப்பு இருக்கும் நிலையைதான் காட்டுகிறது!
சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில், பிளவுபட்ட அமெரிக்கா, அதன் பலதரப்பு நிலையிலான தலைமையை மீண்டும் பெறுவதற்கான திறனை உருவாக்க வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.
கட்டுரையாளர்,சஞ்சய் சிங். இவர் சுவாமி ஷ்ரத்தானந்த் கல்லூரியின் உதவி பேராசிரியர்.