அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிபர் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்குகிறார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாள்களே உள்ளதால், இரு கட்சியினரும் தங்கள் பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் வேட்பளர் கமலா ஹாரிஸின் பரப்புரைக் குழுவில் இடம்பெற்றுள்ள இரண்டு பேருக்கு கடந்த சில நாள்களுக்கு முன் கரோனா உருதி செய்யப்பட்டது. இதனால் கமலா ஹாரிஸ் தனது பரப்புரை கூட்டங்களை அனைத்தையும் ரத்து செய்தார்.
மறுபுறம், கரோனாவில் இருந்து குணமடைந்துள்ள ட்ரம்ப் தொடர்ந்து பரப்புரை கூட்டங்களில் கலந்து கொண்டுவருகிறார். அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான மிச்சிகனில் பேசிய அதிபர் ட்ரம்ப், "கமலா ஹாரிஸ் குழுவில் இருக்கும் சிலருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் நன்றாக இருப்பார் என்று நம்புகிறேன். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
கமலா ஹாரிஸூக்கும், அவரது கணவருக்கும் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவர்களுக்கு கரோனா இல்லை என்பது உறுதியானது. மேலும், கமலா ஹாரிஸ் திங்கள்கிழமை முதல் மீண்டும் பரப்புரை கூட்டங்களில் கலந்துகொள்வார் என்றும் ஜனநாயக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேர்தல் நிதி : ஜோ பிடனைவிட 135 மில்லியன் டாலர்கள் குறைவாகத் திரட்டிய ட்ரம்ப்!