அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிபர் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்குகிறார். தேர்தலுக்கு இன்னும் 20க்கும் குறைவான நாள்களே உள்ளதால், இரு கட்சியினரும் தங்கள் பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கொள்கை மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையம் ஏற்பாடு செய்திருந்த ஆய்வரங்கில் பேசிய முன்னாள் துணைத் தூதர் ஸ்ரீனிவாசன், "ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட பின்னர், அமெரிக்கத் தேர்தல்கள் மீதான இந்தியாவின் ஆர்வம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
வாக்குப்பதிவுக்கு பின் வன்முறை ஏற்படும் என்று பயந்து பல இந்தியர்கள் நியூயார்க்கிலிருந்து வெளியேறுகிறார்கள். மேலும் கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் ஜோ பிடனே வெற்றிபெறுவார் என்று கூறுகிறது" என்றார்.
கரோனா பரவலை ட்ரம்ப் கையாண்ட விதம் குறித்துப் பேசிய அவர், "கரோனாவை அதிபர் ட்ரம்ப் மிகவும் மோசமாக கையாண்டார். அறிவியல் ரீதியாக இந்த பெருந்தொற்றை அவர் அணுகியிருந்தால், உயிரிழப்புகள் பாதியாக குறைந்திருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்க ராணுவ படைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பாத தலைவர் என்று அதிபர் ட்ரம்ப் வரலாற்றில் நினைவு கொள்ளப்படுவார் என்று முன்னாள் துணை தூதர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கமலா ஹாரிஸை வாழ்த்திய ட்ரம்ப்!