அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இம்மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ள ஐநா பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.
அதன்பொருட்டு முன்பே அமெரிக்கா செல்லவுள்ள பிரதமர் மோடி, வரும் 22ஆம் தேதி டெக்சாஸ் மாகாணத்தின் ஹவுஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்களை சந்தித்து உரையாற்றவுள்ளார்.
ஹவுடி மோடி(Howdy Modi!) என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துளசி கபார்ட், ராஜா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் 'ஹவுடி மோடி!' நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபரின் இந்த பங்கேற்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றும், பிரதமர் மோடியுடன் அவர் கொண்டுள்ள நெருங்கிய நட்புணர்வை இது வெளிப்படுத்துகிறது என்றும், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷ் வர்தன் ஸ்ரீகலா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.