அமெரிக்காவில் வரும் நவம்பர் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிபர் ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சிய சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் களமிறங்குகிறார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாள்களே உள்ளதால், இரு தரப்பினரும் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோருக்கு இடையேயான முதல் விவாதம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது.
இந்தச் சூழலில், கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அதிபர் ட்ரம்ப்பிற்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறவிருந்த இரண்டாவது விவாதம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், கரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ட்ரம்ப், கடந்த வாரம் வீடு திரும்பினார். இருப்பினும், கடந்த சில நாள்களாக அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் தனிமையில் இருந்தார்.
தற்போது அதிபர் ட்ரம்ப்பிற்கு நடத்தப்பட்ட கரோனா சோதனையில் அவருக்கு கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக ட்ரம்ப்பின் மருத்துவர் சீன் கான்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "தொடர்ந்து சில நாள்களாக அவருக்கு நடத்தப்பட்ட கரோனா சோதனையில் அவருக்கு கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், அவரது உடலில் தற்போது எவ்வளவு விழுக்காடு கரோனா வைரஸ் உள்ளது என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
தற்போது, கரோனாவிலிருந்து அதிபர் முற்றிலுமாக குணமடைந்துள்ளதால், அவர் மூலம் மற்றவர்களுக்கு கரோனா பரவம் அபாயம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெறவுள்ள தேர்தல் மாநாட்டில் அதிபர் ட்ரம்ப் கலந்துகொள்ளவுள்ள நிலையில், மருத்துவரின் இந்த அறிவிப்பு அவருக்கு நிம்மதியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: "90% பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமாகவுள்ளது" - உலக சுகாதார அமைப்பு