சீனாவின் வூஹானில் தோன்றிய கரோனா வைரஸ், தற்போது உலகெங்கிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக, அமெரிக்காவில் இதன் தாக்கம் மிக தீவிரமாக உள்ளது. கரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டில் இதுவரை 16 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 97 ஆயிரத்து 472 பேர் உயிரிழந்தனர். மேலும், ஊரடங்கு காரணமாக தொழில் துறைகள், நிறுவனங்கள் முடிங்கியுள்ளதால் கோடிக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இதனால், அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மீது அந்நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதனிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெர்ஜினியாவில் உள்ள தன் கோல்ஃப் மைதானத்தில் நேற்று (மே 23) கோல்ஃப் விளையாடினார். இதைக் கண்ட நிருபர்கள், ட்ரம்ப் விளையாடுவதை படம்பிடித்து இணையத்தில் பதவியேற்றனர்.
'எரியும் நெருப்பின் மீது எண்ணெய் ஊற்றுவது போல' இந்த வீடியோ அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை ட்ரம்பின் பொறுப்பற்ற செயலை சாடி வருகின்றனர். வரும் அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிடவுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன், "கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர், கோடிக்கணக்கானோர் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். இதற்கிடையே, அதிபர் கோஃல்ப் விளையாடி பொழுதை கழித்து வருகிறார்" என ட்விட்டரில் விமர்சித்தார்.
2014ஆம் ஆண்டு எபோலா பெருந்தொற்றின் போது ட்வீட் செய்திருந்த ட்ரம்ப், "அமெரிக்கா இத்தனை சோதனைகளை சந்தித்து வரும் வேளையில், அதிபர் ஒபாமா கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்கிறார். இதனை உங்களால் நம்ப முடிகிறதா" என பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க : ஒடிசாவில் ஆன்லைன் மது விற்பனை தொடக்கம்!