அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பினத்தவர் சர்ச்சைக்குரிய விதத்தில் கொல்லப்பட்ட விவகாரம் அந்நாட்டில் போராட்டமாக வெடித்துள்ளது. ஜார்ஜ் ஃப்ளாய்ட் இறப்புக்கு நீதிகேட்டும், அங்குள்ள நிறவெறிக்கு எதிராகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கி தீவிரமாகப் போராடிவருகின்றனர்.
இதன் காரணமாக அந்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. போராட்டத்தின்போது பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு காவல் துறை சட்டத்தில் சீர்த்திருத்தப் பணிகளை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தற்போது மேற்கொண்டுள்ளார்.
இந்தச் சட்டத்திருத்த நடவடிக்கைக்கு முன்னதாக இந்தப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ட்ரம்ப் சந்தித்தார்.
பின்னர் சட்டத்திருத்த உத்தரவில் கையெழுத்திட்டு பேசிய அதிபர் ட்ரம்ப், "இதுபோன்ற சூழலில் வீரம் மிக்க ஆண், பெண் காவலர்களுக்குத் துணை நிற்பது குடிமக்களின் கடமை.
இவர்கள்தான் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க போராடுபவர்கள். எனவே குற்றங்களைக் குறைத்து, நம் பாதுகாப்பின் தரத்தை உயர்த்துவது நமது கடமையாகும்" என்றார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடவுள்ள அதிபர் ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் களத்தில் உள்ளார்.
கரோனா பாதிப்பு, ஜார்ஜ் ஃப்ளாய்ட் விவகாரம் ஆகியவை காரணமாக அதிபர் ட்ரம்ப் மீண்டும் வெற்றிபெறுவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'இந்தியா அத்துமீறி தாக்குதல்' - சீனா குற்றச்சாட்டு