சீன நிறுவனங்களை பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமெரிக்கா கருதுகிறது. குறிப்பாக சீன தொலை தொடர்பு நிறுவனங்கள் மீது அமெரிக்கா முழு கவனம் செலுத்திவருகிறது. ஆகவே 5ஜி என அழைக்கப்படும் அடுத்த தலைமுறை செல்லுலார் நெட்வொர்க்குகளில் சீன தயாரிப்பான ஹவாய் மற்றும் இசட்.டி.இ. உள்ளிட்ட நிறுவன உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பான சட்ட மசோதா அமெரிக்காவில் ஏகோபித்த ஆதரவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இந்த சட்ட மசோதா ஹவாய் மற்றும் இசட்.டி.இ. உள்ளிட்ட தயாரிப்புகளை மாற்ற வழிகோலுகிறது. இதுமட்டுமின்றி சிறிய தொலைதொடர்பு நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் 100 கோடி அமெரிக்க டாலரும் ஒதுக்கியுள்ளது.
இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம் தேசிய பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துவதாகக் கருதப்படும் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட உபகரணங்களை அகற்றி தங்கள் நாட்டு பொருட்களை மாற்ற வேண்டும் என்பதே.
முதல் கட்டமாக இந்த மசோதா இரண்டு மில்லியனுக்கும் குறைவான வாடிக்கையாளர்களைக் கொண்ட தொலைதொடர்பு வழங்குநர்களை இலக்காகக் கொண்டுள்ளது. இதற்கிடையில் ஹவாய் மற்றும் இசட்.டி.இ. உள்ளிட்ட நிறுவனங்கள் உளவு பார்க்கின்றன என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளன.
இதையும் படிங்க: பயணக்கட்டுப்பாடு குறித்து அறிய 24 மணி நேர அழைப்புதவி சேவை