கரோனா வைரஸின் பிறப்பிடமாக சீனா இருந்தாலும், தற்போது அதன் தலைமையகமாக அமெரிக்கா மாறியிருக்கிறது. அமெரிக்காவில் இதுவரை 18 லட்சத்து 97 ஆயிரத்து 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நாடுகளை விட அங்கு கரோனாவின் தாக்கம் அதிகமுள்ளதால், அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், கரோனா பரிசோதனை மேற்கொண்டால் இந்தியாவிலும் சீனாவிலும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மைனே மாநிலத்தில் அவர் பேசுகையில், "அமெரிக்காவில் இதுவரை 2 கோடி பேருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். ஜெர்மனியில் 40 லட்சம் பேருக்கும், தென் கொரியாவில் 30 லட்சம் பேருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, அதிகளவில் பரிசோதனை மேற்கொள்வதே காரணம். இந்தியா, சீனா போன்ற நாடுகளில் அதிகளவில் பரிசோதனை மேற்கொண்டால், உறுதியாகச் சொல்கிறேன் அங்கும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
புரிடன் மருத்துவத் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகளவில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்கிறோம். பரிசோதனை திறனை சாத்தியப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நம் நாடு மீண்டெழுகிறது. யாரும் நினைத்துப் பார்க்காத அளவுக்கு பொருளாதாரம் மறுமலர்ச்சியடைகிறது" என்றார்.
இதையும் படிங்க: உச்சம் தொட்ட கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை: திணறிவரும் பிரேசில்