தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம், ‘ஆசியான்’ என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புரூனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆசியான் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் நட்பு நாடுகளாக இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.
இந்நிலையில், ஆசியான் சங்கத்தின் அமெரிக்கா தூதராக மேஜர் (ஓய்வு பெற்ற) ஜெனரல் எல்டன் ரெகுவாவை தற்போதைய அதிபர் ட்ரம்ப் நியமனம் செய்துள்ளார்.
கிடைத்த தகவலின்படி, மேஜர் ஜெனரல் எல்டன் பி ரெகுவா 2013இல் ஓய்வுபெறுவதற்கு முன்பு 36 ஆண்டுகள் அமெரிக்க ராணுவம் மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ரிசர்வ் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.
இவர் ராணுவத்தில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக பல விருதுகளையும் குவித்துள்ளார். தற்போது, வர்ஜீனியாவின் ஸ்பிரிங்ஃபீல்டில் உள்ள நெக்ஸ்ட்ஸ்டெப் டெக்னாலஜி, இன்க் நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார்.
ஜனவரி மாதத்தில் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில், ட்ரம்பின் புதிய நியமனங்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.