கரோனா பெருந்தொற்று பாதிப்பு உலக வல்லராசான அமெரிக்காவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கரோனாவின் தாக்கம் காரணமாக அமெரிக்காவில் கடும் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் அங்கு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பொருளாதார மந்தநிலை, வேலையின்மை போன்ற விவகாரங்கள் தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவிக்குவருவது கேள்விக்குறியாகியுள்ளது.
இதை சரிக்கட்டும் விதமாக, அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அந்நாட்டைச் சேர்ந்தோரை பணியமர்த்த அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்திவருகிறார். இதன் தொடர்ச்சியாக வெளிநாட்டிலிருந்து வந்து வேலை செய்ய வருபவர்களுக்கு வழங்கப்படும் எச்.1.பி விசாக்களை தற்காலிகமாக நிறுத்திவைக்க அவர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த எச்.1.பி விசாக்களில்தான் அதிகளவிலான இந்தியர்கள் வேலைப்பார்த்துவரும் நிலையில், ட்ரம்பின் இந்த முடிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு வரும் அக்டோபரில் இருந்து நடைமுறைக்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 22 ஆயிரம் ஊழியர்களை வெளியேற்றுகிறது ஜெர்மன் விமான நிறுவனம்!