அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 270 எலக்டோரல் வாக்குகள் தேவை. ஜனநாயக, குடியரசு கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் 238 வாக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் ட்ரம்ப் 213 வாக்குகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டதாகவும் ஆனால், ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் சதிச் செயலில் ஈடுபட்டுவருவதால் முடிவுகள் அறிவிப்பதை நிறுத்த உச்ச நீதிமன்றம் செல்வேன் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "நாம் பெரும்பாலான மாகாணங்களில் வெற்றிபெற்றுவருகிறோம். வெற்றியை அறிவிக்கலாம் என வரும்போது, தற்போது அந்த சதி செயல் அம்பலமாகியுள்ளது. அமெரிக்க மக்களை ஏமாற்றுகிறார்கள்.
ஒருபோதும், சதி செயல் நடக்க விடமாட்டோம். வாக்குப்பதிவை தடுக்க உச்ச நீதிமன்றம் செல்வோம். சர்ச்சைக்குரிய விதமாக சேர்க்கப்பட்ட வாக்குச்சீட்டுகளை எண்ண விடமாட்டோம். இது அமெரிக்க மக்களுக்கு அவமானம் விளைவிப்பதாக உள்ளது." என்றார்.
மெயில் மூலம் வாக்களித்தவர்களின் வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், இந்த விமர்சனத்தை ட்ரம்ப் முன்வைத்துள்ளார். கரோனா பரவலை தடுக்கும் நோக்கில் மாகாண அரசு அனுமதி அளித்தவர்கள் மெயில் மூலம் வாக்களிக்கலாம். ஜனநாயக கட்சியை சேர்ந்த பெரும்பாலானோர் முன்னதாக வாக்கு செலுத்தும் முறையை பயன்படுத்தி மெயில் மூலம் வாக்களித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முன்கூட்டியே வெற்றியை அறிவித்த ட்ரம்ப்: எச்சிரிக்கை விடுத்த ட்விட்டர்!