ஜனநாயகக் கட்சி சார்பாக 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடனை பழிவாங்கும் நோக்கில், அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்படி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்ததாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை அமெரிக்க நாடாளுமன்றத்தின் விசாரணைக் குழு விசாரித்துவருகிறது. ட்ரம்ப்பின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி தலைமையில் நடைபெற்றுவரும் இந்த விசாரணை பதவி நீக்க விசாரணை (Impeachement Inquiry) என்று அழைப்படுகிறது.
எந்த ஒரு ஆதாரமும் இன்றி ஜனநாயகக் கட்சியினர் தன் மீது வீண்பழி சுமத்துவதாக அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சாடிவருகிறார்.
பதவி நீக்க விசாரணையின் அடுத்தக்கட்ட விசாரணை இன்று தொடங்கவுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியினர் பதவி நீக்க விசாரணை வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும் வழிமுறைகளை தங்களுக்கு சாதகமாகத் திருத்திக்கொள்வதாகவும் அதிபர் ட்ரம்ப் தற்போது குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இட்டிருந்த ட்வீட்டில், "பதவி நீக்க விசாரணையின் எந்த ஒரு வழிமுறையையும் பின்பற்றாமல், அதனை தங்களுக்குச் சாதகமாகத் திரித்துக்கொண்டு ஜனநாயகக் கட்சியினர் செயல்பட்டுவருகின்றனர். ஏனென்றால், என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அவர்களிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. விளையாட்டில் வெல்ல முடியவில்லை என்றால், அதனுடைய விதிமுறைகளை மாற்றுவதா!" என ஆவேச கேள்வியெழுப்பினார்.
ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் பலமாக எதிரொலிக்கக்கூடும்.
இதையும் படிங்க : அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ட்ரம்ப்: விசாரணை அறிக்கையில் தகவல்