அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் வலுத்துவருகிறது. இதனிடையே, ஈரான் வான் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பறந்ததாக அமெரிக்க ராணுவத்தின் நார்த்ரொப் குரூமேன் ஆர்குயூ- 4 குளோபல் ஹாக் (Northrop Gruman RQ-4 Global Hawak) ரக ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது ஈரானின் பாதுகாப்புப் படைகளுள் ஒன்றான புரட்சிகர ராணுவப் படை.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாகவும் இதனை அமெரிக்கா ஒரு போதும் பொறுத்துக் கொள்ளாது என்றும் வன்மையாகக் கண்டித்தார். இதற்கு அமெரிக்கா பதிலடி தருமா என்ற கேள்வியை எதிர்கொண்ட ட்ரம்ப், "விரைவில் பார்ப்பீர்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த இருந்ததாகவும், அதனை இறுதி நேரத்தில் நிறுத்திவிட்டதாகவும் ட்ரம்ப் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஈரானின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நேற்று இரவு, நாங்கள் தாக்குதல் மேற்கொள்ளவிருந்தோம். அப்போது, இந்தத் தாக்குதலால் எத்தனை பேர் உயிரிழப்பார்கள் என்று நான் கேள்வி எழுப்பினேன்.
அதற்கு ஜெனரல் ஒருவர், "150" என்று பதிலளித்தார். தாக்குதல் நடப்பதற்கு 10 நிமிடம் முன்பு திட்டத்தைக் கைவிடுமாறு நான் உத்தரவிட்டேன். ஆளில்லா விமானத்தைச் சுடுவதற்கு இத்தனை பேரைக் கொல்வது சரியில்லை என்பதே அதற்கு காரணம்” என பதிவிட்டுள்ளார்.