அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக வரும் 24ஆம் தேதி இந்தியா வருகிறார். அப்போது, குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் உள்ளிட்ட இடங்களுக்கு அவர் செல்லவிருப்பதால், ட்ரம்ப் பயணிக்கும் இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மிக விரிவாகவும், உறுதியாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்புக்காக அகமதாபாத் நகரில் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விரிவான தகவல்களைப் பார்ப்போம்.
உலகின் மிகப்பெரிய தவிர்க்க முடியாத சக்தியாக அமெரிக்கா விளக்குகிறது. போட்டஸ் (POTUS - ப்ரெசிடென்ட் ஆப் தி யுனைடெட் ஸ்டேட்ஸ்) என்று அழைக்கப்படுபவர், உலகின் மிக அதிகபட்ச பாதுகாப்பைக் கொண்டுள்ளார். அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு ரகசியமாக மேற்கொள்ளப்படுகிறது.
அவரது பாதுகாப்பு அதிகாரிகள் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்படுகிறார்கள். அதிபர் தனது குளியலறையைப் பயன்படுத்தும்போது கூட, ரகசியப் பாதுகாவலர்கள் கண்காணித்தப்படியே இருக்கிறார்கள். மிகவும் சக்திவாய்ந்த ஆட்சியாளருக்கான சில பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தற்போது பார்ப்போம்.
அமெரிக்க அதிபரின் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போதும், அவரின் வருகைக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ரகசிய உளவாளிகள் அதில் பணியாற்றத் தொடங்குவார்கள். அதிபர் விமான நிலையத்தை அடையும் போது, விமானம் பறக்கும் வான்வெளியைக் கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் எடுத்துக் கொள்வர்.
ஸ்னிஃபர் நாய்களின் குழு, தரையிறங்கும் இடத்திலிருந்து அதிபர் வருகைதரும் இடம்வரை பாதை முழுமையான பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிபருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏதுவாக , ரகசிய உளவாளிகள் அதிபரின் ரத்தப் பிரிவைத் தயார் நிலையில் வைத்திருப்பார்கள்.
அதிபரின் வருகைக்கு முன்னர் ஏழு விமானங்கள் பல்வேறு கருவிகள், உபகரணங்களுடன் வருகை தரும் இடத்தை அடைகின்றன. ஒரு சிறப்பு கார், தகவல் தொடர்புக்கான உபகரணங்கள், அதிகாரிகள், வெள்ளை மாளிகையின் ஊழியர்களும் விமானங்களுடன் வருகைத் தருவர்.
அதிபர் தங்க வேண்டிய அறை தீர்மானிக்கப்பட்ட பின்னர், அறைக்குள் பல்வேறு வகையான பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்படுகின்றன. அவர்கள் குண்டு துளைக்காத சிறப்பு பிளாஸ்டிக் கவசங்களை ஜன்னல்களில் வைக்கின்றனர். ரகசிய பிரிவுக் குழுவானது அதிபர், அவரது தோழர்களுக்கு ஒரு குறியீட்டு பெயரை வழங்கும்.
உதாரணமாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் மொகல் என்றும் அவரது மனைவி மெலனியா மூஸ் என்றும் அழைக்கப்படுகின்றனர். அகமதாபாத்திற்கு வந்தவுடன் அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணம் செய்யும் சிறப்பு கார், 'தி பீஸ்ட்' என்று அழைக்கப்படுகிறது.
"மிருகம்" என பெயர் குறிப்பிடுவது போல உண்மையில் இந்த கார் மூர்க்கமானது...!
இவற்றின் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்....
1- போயிங் 757 விமானத்தின் கதவுகளைப் போல 'தி பீஸ்ட்'-ம் வலுவான கதவுகளைக் கொண்டுள்ளது. அவற்றில் ஆயுதங்கள் உள்ளன. வாயு, ரசாயனம் ஆகியன உள்ளே நுழைய முடியாத அளவுக்கு அவை இறுக்கமாக மூடப்பட்டிருக்கும்.
2- உளவு சேவையிலிருந்த ஒருவரே பீஸ்ட்-க்கு எப்போதும் டிரைவராக இருப்பார். அவருக்கு பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், மிகவும் கடினமான நிலையிலும் கூட காரை ஓட்டவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
3- டிரைவரின் டாஷ்போர்டு ஜிபிஎஸ் கண்காணிப்பு அமைப்புடன் பொருத்தப்பட்டு தகவல் தொடர்பு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார், கிட்டத்தட்ட 180 டிகிரி திரும்பக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
4- பீஸ்ட் கார் முழுவதும் எஃகு தகடுகளால் பாதுகாப்பாக உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் வெடிகுண்டு தாக்குதலை தாங்கக்கூடிய உறுதியான சேஸ் உள்ளது.
5- பீஸ்ட் எஃகு கலந்து விசேஷமாக தயாரிக்கப்பட்ட டயர்களைக் கொண்டுள்ளது, அது ஒருபோதும் பஞ்சர் ஆகாது. எந்த டயர் வெடித்தாலும் சக்கரத்தின் உலோக வளையம் மூலம் கார் இயங்கும்.
6- அதிபருடைய ரத்த பிரிவின் மாதிரி, பீஸ்ட் வாகனத்தில் வைக்கப்பட்டிருக்கும். காரில் பம்ப் அதிரடி ஷாட்கன்கள், கண்ணீர்ப்புகை குண்டுகள் போன்றவையும் இருக்கும்.
7- அதிபர் அமர்ந்திருக்கும் தி பீஸ்ட் அறையில் செயற்கைக்கோள் தொலைபேசி வசதியும் உள்ளது. அங்கிருந்து அவர் பென்டகனுடனும், அமெரிக்காவின் துணை அதிபருடனும் நேரடியாக பேச முடியும்.
8- தி பீஸ்ட்டுக்குள் மிகவும் பாதுகாப்பான அம்சம் என்னவென்றால், அதிபர், பிற சக பயணிகளுக்கு இடையே ஒரு அறை உள்ளது. இந்த அறையை அதிபரால் மட்டுமே நகர்த்த முடியும்.
இந்த பாதுகாப்பு ஏற்பாடு, கடந்த முப்பது ஆண்டுகளில் யாரும் போட்டஸைத் தாக்க முடியவில்லை என்பதற்கு மிகவும் விரிவான, முழுச்சான்றாகும். இருப்பினும், கடந்த காலத்தில் சில கொடூரமான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. போட்டஸ் மீது இன்று வரை 7 பெரிய தாக்குதல்கள் நடந்துள்ளன.
இந்தத் தாக்குதல்களில் இதுவரை 7 அதிபர்கள் படுகாயமடைந்துள்ளனர். அதேபோன்று ஐந்து அமெரிக்க அதிபர்கள் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். எனவே, எந்தவொரு அசம்பாவித சம்பவமும் மீண்டும் நடைபெறக்கூடாது என்பதற்காக போட்டஸ்-க்கான பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது.