நியூயார்க்: ஜெனீவாவில் ஐநா பாதுகாப்புச் சபையில் இந்தியத் தூதர் நாகராஜ் நாயுடு உரையாற்றினார். அப்போது, "வெளிப்புறத் தலையீடுகளால் சிரியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. சிரியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் 11 ஆயிரம் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் நிலைகொண்டிருப்பது, பயிற்சி முகாம்களை அமைத்திருப்பது தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கைகள் கவலையை ஏற்படுத்துகின்றன. பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச கடமைகளை நிறைவேற்ற அனைத்துத் தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.
பத்தாண்டு காலமாக சிரியாவில் நடைபெறும் மோதலால் அந்நாட்டு மக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கோவிட்-19, கடுங்குளிர் போன்றவற்றால் இடம்பெயர்ந்த 62 லட்சம் மக்கள் உள்பட 1.7 கோடி சிரியா மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மனித உரிமை மீறலும், விசாரணை ஆணையமும்
சிரியாவில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயாதீன பன்னாட்டு விசாரணை ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அறிக்கையையும் தனது உரையின்போது நாகராஜ் நாயுடு சுட்டிக்காட்டினார்.
சிரியா மோதலுக்குத் தீர்வுகாண தடையாக இருக்கும் முட்டுக்கட்டைகளை உடைக்க அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்புவிடுத்த இந்தியா, "சிரியா மீது பொருளாதாரத் தடைவிதித்துள்ள நாடுகள் அதை மதிப்பீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டதோடு, அந்தப் பொருளாதாரத் தடைகள் அங்குள்ள பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மோசமாக்குகின்றன" எனவும் குறிப்பிட்டது.
இந்தக் கடுமையான நேரத்தில் சிரியா மக்களுடன் இந்தியா தொடர்ந்து நிற்பதாகவும், 1.2 கோடி டாலர் மதிப்பிலான மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளதாகவும் நாகராஜ் நாயுடு தனது உரையில் சுட்டிக்காட்டினார்.
மேலும், கோவிட்-19 பரவலைச் சமாளிக்க 10 மெட்ரிக் டன் மருத்துவப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாத தொடக்கத்தில் 2000 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்த நாகராஜ் நாயுடு, "ஐநா அமைப்புடன் இணைந்து சிரியா மக்களுக்கு உதவ இந்தியா தயாராக உள்ளது. இந்தியாவின் நம்பகமான, நீண்டகால நண்பரான சிரியாவுக்கு அனைத்து உதவிகளையும், ஆதரவையும் தொடர்ந்து வழங்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெள்ளை மாளிகை ராணுவ அலுவலக இயக்குநரான இந்தியர்