அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரில் 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் எனும் ஆப்பிரிக்க - அமெரிக்கர், கடந்த மாதம் 25ஆம் தேதி காவல் துறையினரின் கோரப் பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலகளவில் பெரும் எதிர்ப்பலைகளைக் கிளப்பியுள்ளது. ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், நிறவெறியை எதிர்த்தும் அந்நாட்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் எதிரொலியாக, பிரேசில், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் நிறவெறிக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில், ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் இறுதி ஊர்வலத்தைத் தொடர்ந்து, நேற்று அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் (கீழ்) சபையில் பேசிய அவரது சகோதரர் ஃபிளோனைஸ் ஃப்ளாய்ட், "நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன், இதனை மட்டுமே நிறுத்தங்கள். வலியை நிறுத்துங்கள். பெரி (ஜார்ஜின் செல்லப்பெயர்) ஒன்றும் டி - ஷர்ட்களில் காணப்படும் ஏதோ ஒரு முகமல்ல, நீண்டு கொண்டே செல்லும் பட்டியலில் காணப்படும் பெயரும் அல்ல.
வீதிகளில் போராட்டங்களில் ஈடுபடுவோர் 'போதும் இது போதும்' எனக் கூப்பாடிட்டு வருகின்றனர். இந்த நாட்டிற்கும் உலகிற்கும் ஏற்ற பொறுப்புள்ள அரசியல் தலைவர்களாக இருங்கள். சரியானவற்றைச் செய்யுங்கள்" என்றார்.
அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் காவல் துறையினருக்கு எதிராக 'ஜஸ்டிஸ் என் போலிஸ்' சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து, பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சியினர் முன்னிலையில் விசாரணை தொடங்கியுள்ள சூழலில், அங்கு ஆஜராகி வாக்குமூலம் அளித்த ஃபிளோனைஸ் ஃப்ளாய்ட் இதனை வலியுறுத்தினார்.
இந்த விசாரணையில் சமூக உரிமை, சட்ட ஒழுங்கு அலுவலர்களும் வாக்குமூலம் அளிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கரோனாவால் மோசமடைந்துவரும் உலகம்: வருந்தும் உலக சுகாதார அமைப்பு!