மின்சாரத்தில் இயங்கும் கார்களை வடிவமைக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மாஸ்க்கிற்கு சொந்தமான மற்றொரு நிறுவனம்தான் ஸ்பேஸ் எக்ஸ். விண்வெளிக்கு குறைந்த விலையில் ராக்கெட்டை அனுப்பும் நிறுவனம்தான் ஸ்பேஸ் எக்ஸ்.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், புதன்கிழமை(டிச.10) அமெரிக்காவின் டெக்ஸாஸ் கடற்கரையில் இருந்து ராக்கெட் சோதனையை மேற்கொண்டது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ராக்கெட் மூலம் மிகக் குறைந்த செலவில் செயற்கை கோள்களை விண்வெளிக்கு ஏவ முடியும். இருப்பினும், சோதனையில் தரையிறங்கும்போது எதிர்பாராத வகையில் வெடித்துச் சிதறியது.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை, ராக்கெட்டை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தாவர்கள். ஆனால், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட் தொழில்நுட்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரே ராக்கெட்டை பல முறை செலுத்தும் வகையில் வடிவமைத்தனர். இதன் மூலம் ராக்கெட் ஏவுதலில் ஏற்படும் செலவில் 40 விழுக்காடு வரை சேமிக்க முடிந்தது.
டெக்ஸாஸ் கடற்கரையில் நடைபெற்ற சோதனை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேலும், ராக்கெட் வெடித்து சிதறிய வீடியோவை பலரும் ட்விட்டரில் ஷேர் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது ட்விட்டரில், "தரையிறங்கும் போது எரிபொருள் டேங்கின் அழுத்தம் குறைவாக இருந்தது, இதனால் தரையிறங்கும்பேது வேகம் அதிகமாக. ஆனால், இந்தச் சோதனையில் எங்களுக்கு தேவையான அனைத்து தரவும் கிடைத்தது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருந்தார்.
மேலும், "செவ்வாய் கிரகமே... விரைவில் நாங்கள் வருகிறோம்" என்றும் பதிவிட்டுள்ளார். செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற வைக்க வேண்டும் என்பதே எலான் மஸ்க்கின் கணவு திட்டமாகும். இதை நினைவாக்கவே அவர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை கடந்த 2002ஆம் ஆண்டு தொடங்கினார்.
இது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது இணையதளத்தில், "இது போன்ற ஒரு சோதனையில், வெற்றி என்பது திட்டத்தை முழுமையாக நிறைவு செய்வது மட்டுமல்ல. மாறாக, இதன் மூலம் நாம் எவ்வளவு கற்றுக்கொண்டோம் என்பதும்தான். இதன் மூலம் தேவையான தொழில்நுட்பத்தை பெற்று, வரும் காலங்ளில் பல வெற்றியை நிகழ்த்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த மே மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தற்கு விண்வெளி வீரர்களையும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவிற்காக அனுப்பியது. தனியார் நிறுவனம் ஒன்று மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.
இதையும் படிங்க: பில் கேட்ஸை ஓவர் டேக் செய்த எலான் மஸ்க்!