அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசுக் கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பிடன் போட்டியிடுகிறார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்தே இரு தரப்பினரும் அனல் பறக்கும் வகையில் பரப்புரை செய்து வருகின்றனர். தேர்தலின் இறுதிகட்ட பரப்புரை வேகமெடுத்திருக்கும் இந்தச் சூழலில், கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கு பொது முடக்கத்தை கொண்டு வருவதிலிருந்து, பருவ நிலை மாற்றம், பொருளாதார நடவடிக்கைகள் என அனைத்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், வியாழக்கிழமை (அக்.22) இரவு நடைபெற்ற 90 நிமிட இறுதி விவாதத்தின்போது, ட்ரம்ப், பிடன் இருவரும் நேருக்கு நேர் கருத்துச் சண்டையிட்டனர்.
அப்போது பேசிய அதிபர் ட்ரம்ப், "முன்னாள் துணை ஜனாதிபதியும், ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஜோ பிடனின் மகன் ஹண்டர் பிடன் கடந்த 2014ஆம் ஆண்டில் உக்ரைன் நாட்டைச்சேர்ந்த புரிஸ்மா ஹோல்டிங் என்ற இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனத்தின் கட்டண வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
அந்நிறுவனத்தில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக அறிய முடிகிறது. அது குறித்து பதியப்பட்ட வழக்கு பின்னர் இருட்டடிப்பு செய்யப்பட்டது. அதில் ஜோ பிடனின் தலையீடு இருப்பதாக நான் கருதுகிறேன்" எனக் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த ஜோ பிடன், "இந்தக் குற்றச்சாட்டு மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஹண்டர் பிடன், எந்தவொரு தவறையும் செய்யவில்லை என நிறுவப்பட்டுள்ளது. ஹண்டர் பிடனை அதில் இணைக்க உக்ரைன் ஜனாதிபதிக்கு ட்ரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க முயன்றார்” எனக் குறிப்பிட்டார்.