அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் குறித்து வெளியான கருத்துக்கணிப்பு அனைத்தும் ஜோ பிடனுக்கு சாதகமாக உள்ளது.
இதன் காரணமாக பரப்புரையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தீவிரப்படுத்தியுள்ளார் ட்ரம்ப். 2016ஆம் ஆண்டு தேர்தலில் ட்ரம்ப், ஹிலாரி கிளிண்டனை நூலிழையில் தோற்கடித்த மாகாணங்களில் ஒன்று பென்சில்வேனியா.
இருப்பினும், இந்தாண்டு கருத்துக்கணிப்பு முடிவுகள் எதுவும் சாதகமாக வராததால் பென்சில்வேனியாவில் தனது பரப்புரையை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். நேற்று(அக். 26) நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், "துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை ஜோ பிடன் முன்மொழிந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை(அக் 25) அவர் கலந்துகொண்ட விவாதத்தை பார்த்தீர்களா? அந்த முழு 60 நிமிட நிகழ்ச்சியும் ஏதோ ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி போல இருந்தது. கமலா ஹாரிஸைப் போலவே அந்நிகழ்ச்சியில் மிக மோசமாக இருந்த மற்றொரு விஷயம் அவரது சிரிப்பு.
அவர் தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தார். சீரியஸான கேள்விகளை கேட்கும்போதும் அவர் சிரித்துக்கொண்டே இருக்கிறார். அவருக்கு உண்மையில் எதோ பிரச்னை இருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
இப்படிப்பட்ட ஒரு ஆள் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக இருக்கலாமா சொல்லுங்கள். அப்படி நடக்க நீங்கள் அனுமதிக்கக்கூடாது" என்றார்.
தொடர்ந்து ஜோ பிடனை விமர்சிக்கத் தொடங்கிய அவர், "பிடன் வெற்றி பெற்றால் சோசலிச கருத்துகளை அவர் நாட்டில் புகுத்துவார். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட 40 முக்கிய அதிபர்களை என்னால் குறிப்பிட முடியும். அவர்கள் யாரும் தூங்கு மூஞ்சி பிடனுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள மாட்டார்கள்.
எப்போதும் தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவருடன் எங்களால் எப்படி ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியும். தயவு செய்து நீங்களே அதிபராகிவிடுங்கள் என்று ஒரு தலைவர் என்னிடம் வெளிப்படையாகவே தெரிவித்தார்" என்று சகட்டுமேனிக்கு கலாய்த்துள்ளார்.
இதையும் படிங்க: சூடான் மீதான தடை நீக்கம்: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு