அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதும் அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்தை முன்னிறுத்தி அரசியல் செய்தார். தனது அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை அமெரிக்காவுக்குச் சாதகமாக அமையுமாறு நடைமுறைப்படுத்தினார். இதன் காரணமாக சீனா உள்ளிட்ட உலகின் முன்னணி நாடுகளுடன் மறைமுக வர்த்தக போர் நடைபெற்றுவருகிறது.
வர்த்தகம் மட்டுமில்லாது வேலை வாய்ப்பிலும் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை வழங்கவேண்டும் என்ற முழக்கத்தை முன்வைத்து அழுத்தம் அளித்துவருகிறார் ட்ரம்ப்.
மேலும், அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்கள் பயன்படுத்த வேண்டிய ஹெச்.1.பி. விசாவை வழங்குவதில் பல கெடுபிடிகளைக் காட்டிவருகிறார். அதன் காரணமாக அந்நாட்டில் அதிகளவில் வேலை செய்து வரும் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்தியர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்தியர்களுக்கு விசா வழங்க மறுப்பது நியாயமற்ற செயல் என்றும், அமெரிக்க அரசு வேண்டுமென்றே பாரபட்சம் காட்டுவதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளது.