கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் தற்போதுவரை வாக்கு எண்ணிக்கையில் முன்னணி வகித்துவருகிறார்.
அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்தே இரு தரப்பினரும் அனல் பறக்கும் வகையில் பரப்புரை செய்துவந்தாலும் முன்னாள் துணை அதிபரும், ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஜோ பிடன் மக்கள் செல்வாக்கை அதிகளவு பெற்றிருந்தார்.
கோவிட்-19 பரவல் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என அதிபர் ட்ரம்ப் மீது அதிருப்தியில் அமெரிக்க மக்கள் பிடனை ஆதரித்ததாகவே அறிய முடிகிறது.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்து அதிபர் ட்ரம்ப்பை காட்டிலும் முன்னணி வகித்துவருகிறார்.
குறிப்பாக, அஞ்சல் வாக்குகளில் எண்ணிக்கையில் புறம் ஜோ பிடனுக்கு ஆதரவாக ஏறத்தாழ 89% வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்த நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், " வெள்ளை மாளிகையில் வாக்கு எண்ணும் செயல்முறை நியாயமாக நடைபெறவில்லை, ஊழல் மிகுந்துவிட்டது" என ஆதாரமற்ற குற்றச்சாட்டைக் கூறினார்.
அதிபர் ட்ரம்ப்பின் இந்த கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த டெக்சாஸ் குடியரசுக் கட்சியின் தலைவர் வில் ஹர்ட், " ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் முறைகேடு என ஆதரமற்ற விஷயங்களைப் பற்றி ட்ரம்ப் பேசுவது ஆபத்தானது மற்றும் தவறானது. ட்ரம்பின் கருத்துக்கள் அமெரிக்க அரசியல் செயல்முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. மேலும், அவை இந்த நாட்டின் அடித்தளமாக உள்ள கட்டமைப்பை காலி செய்கிறது" என்றார்.
ஏபிசி நியூஸின் ஆய்வாளரும், ட்ரம்ப்பின் கூட்டாளியுமான நியூ ஜெர்சியை சேர்ந்த கிறிஸ் கிறிஸ்டி கூறுகையில், "ட்ரம்பின் வாதத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை
தேர்தல் வாக்கு எண்ணிக்கை மீதான ட்ரம்பின் இந்த மோசமான அரசியல் விமர்சனத்தை ஒருகாலும் ஏற்க முடியாது" என தெரிவித்தார்.
இல்லினாய்ஸைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் தலைவர் ஆடம் கின்சிங்கர் கூறுகையில், " அமெரிக்காவின் ஜனநாயகம், அரசியலமைப்பு மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
தேர்தல் மோசடி தொடர்பான அதிபரின் கூற்றுக்கள் பைத்தியக்காரத்தனமானவை. ட்ரம்பிற்கு மோசடி குறித்து முறையான கவலைகள் இருந்தால், அவை ஆதாரங்களின் அடிப்படையில் சொல்லி இருக்க வேண்டும். அதனை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும்" என கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்புகளில், அதிபர் ட்ரம்ப் அவரது போட்டியாளர் பிடனைவிட கீழே உள்ளார். பொதுமக்களின் வாக்குகளைவிட மாகாண அளவில் தேர்வு செய்யப்படும் அந்த 270 உறுப்பினர்களே ஜனாதிபதி யார் என்பதை முடிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.