அமெரிக்கா: கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபட் சமீபத்தில் தனது பணியாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பணியாளர்கள் தங்களது தடுப்பூசி நிலவரம் குறித்து உடனடியாகப் பதிவுசெய்ய அறிவுறுத்தியுள்ளது.
மேலும், முழுமையாகத் தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஜனவரி 18ஆம் தேதிக்குள், தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. குறிப்பிட்டபடி முறையாகத் தடுப்பூசி செலுத்தாவிட்டால் அவர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்படாது.
இது நீடித்தால், ஆறு மாதங்கள் ஊதியம் இல்லாமல் விடுப்பு கொடுக்கப்படும் என்றும், இறுதியில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரோனா தொற்று, உருமாறிய தொற்றான ஒமைக்ரானின் பரவல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பைடன் அரசு தடுப்பூசியை கட்டயமாக்கிவருகிறது. இதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில், ஏறத்தாழ ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் கூகுளில் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒமைக்ரான்: குழந்தைகளுக்கு எப்போது தடுப்பூசி?