செர்பிய-அமெரிக்கரான நிக்கோலா டெஸ்லா 1884ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு குடிபெயர்ந்தவர். அதைத்தொடர்ந்து 1891ஆம் ஆண்டு, டெஸ்லா அமெரிக்க குடியுரிமையைப் பெற்றார்.
உலகின் முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவராக கருதப்படும் டெஸ்லா, சுமார் 300 காப்புரிமைகளை வைத்திருந்தார். ஏசி மின்சார சக்தி மட்டுமல்லாது மோட்டார்கள், ரேடியோக்கள், எக்ஸ்ரேக்கள் உள்ளிட்ட பல முக்கியத் தொழில் நுட்பங்களில் டெஸ்லாவின் பங்கு முக்கியமானது.
1884ஆம் ஆண்டு அமெரிக்கா வந்த டெஸ்லா, சிறிது காலம் தாமஸ் எடிசனுடன் பணியாற்றினார். அதைத்தொடர்ந்து சில காரணங்கள் காரணமாக விரைவிலேயே தனியாக தனது ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். டெஸ்லா தனது ஏசி இயந்திரங்களுக்கான காப்புரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் என்பவருக்கு விற்றார்.
டெஸ்லா - முக்கியக் குறிப்புகள்
- டெஸ்லா தனது சிறு வயதிலேயே வீட்டிலுள்ள பொருள்களை வைத்து, சிறிய வீட்டு உபகரணங்களைக் கண்டுபிடித்தார்.
- பாதிரியாரான டெஸ்லாவின் தந்தை மிலுடின் டெஸ்லா, தனது மகனையும் பாதிரியாராக மாற்றவே விரும்பினார். ஆனால், டெஸ்லாவின் ஆர்வம் முழுவதும் அறிவியல் மீதே இருந்தது.
- பல முக்கிய அறிவியல் பாடங்களை படித்த பின், டெஸ்லா புடாபெஸ்ட் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு சிறிது காலம் தொலைபேசி நிலையத்தில் பணியாற்றினார்.
- இங்கு பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான் Induction motor-க்கான யோசனை டெஸ்லாவுக்கு வந்தது.
- ஆனால், பல ஆண்டுகள் பின்னரே, அவர் தனது அறிவியல் ஆசையை நோக்கிப் பயணித்தார். தனது 28 வயதில் டெஸ்லா ஐரோப்பாவை விட்டு அமெரிக்காவுக்குச் செல்ல முடிவு செய்தார்.
- நரம்பியல் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட டெஸ்லா, நியூயார்க் நகரத்தின் பூங்காக்களில் இருக்கும் புறாக்களைப் பராமரிப்பதில் தனது நேரத்தை செலவிட்டார்.
- இறுதியில், 1943ஆம் ஆண்டு தனது 86ஆவது வயதில் டெஸ்லா நியூயார்க்கிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் உயிரிழந்தார்.
இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் அமெரிக்கா: சீனா பகிரங்க குற்றச்சாட்டு