புட்பால் வீரர் ஜார்ஜ் ப்ளாய்ட், மினியபோலிஸ் காவலரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பீனிக்ஸ், டென்வெர், லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் வேகாஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி செல்கின்றனர். அதில், ‘அவர் மூச்சுவிட இயலவில்லை என்றார். ஜார்ஜுக்கு நீதி வேண்டும்’, ‘நீதியில்லையேல் அமைதியில்லை’ உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அந்த பதாகைகளில் இடம்பெற்றிருந்தன.
அட்லான்டாவில் நடந்த அமைதி போராட்டம் சிலரால் வன்முறையாக மாறியது. காவல் துறையின் வாகனங்கள் தாக்கப்பட்டன, அதில் ஒரு கார் தீயிட்டு கொளுத்தப்பட்டது. சிஎன்என் லோகோவில் ஸ்பிரே அடிக்கப்பட்டது, உணவகங்கள் தாக்கப்பட்டன. காவலர்கள் மீது பாட்டில்களை விட்டு எறிந்து, வேலையை விடும்படி போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
மூன்று காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது, போராட்டக்காரர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அட்லான்டா போலீஸ் செய்தித் தொடர்பாளர் கர்லோஸ் கேம்போஸ், போராட்டக்காரர்கள் காவலர்களை பிபி துப்பாக்கியால் சுட்டதாகவும், கற்கள், பாட்டில்கள் மற்றும் கத்தி கொண்டு தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சண்டையை மாடியில் இருந்து வேடிக்கை பார்த்த மக்கள் சிரித்தார்கள். போராட்டக்காரர்கள் காவலர்கள் பேச்சைக் கேட்டு கலைந்து செல்ல மறுத்தனர். சிலர் முக்கியமான பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சித்ததாக அவர் தெரிவித்தார்.
போராட்டக்காரர்களிடம் செய்தியாளர்கள் மூலம் பேசிய மேயர் கெய்ஷா லேன்ஸ், இது போராட்டம் அல்ல. மார்டின் லூதர் கிங் ஆன்மா இந்த செயல்களை விரும்பாது. நீங்கள் எங்கள் நகரத்தை இழிவுபடுத்தும் செயலை செய்துகொண்டிருக்கிறீர்கள். ஜார்ஜ் ப்ளோய்ட் மற்றும் இங்கு கொல்லப்பட்ட பிற மக்களை நீங்கள் இழிவுபடுத்துகிறீர்கள். அனைவரும் வீட்டுக்கு செல்லுங்கள் என போராட்டக்காரர்களுக்கு தகவல் கொடுத்தார்.
அமெரிக்கர்களின் ஓயாத கறுப்பின வெறுப்பே இந்த வன்முறைக்கு முக்கியக் காரணம் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். ஜேமி ஃபாக்ஸ், ஸ்னூப் டாக் போன்ற கறுப்பின பிரபலங்கள், அமெரிக்காவில் கொலை செய்யும் சைக்கோக்கள் கூட கறுப்பின மக்களை விட மரியாதையாக நடத்தப்படுகிறார்கள் என்கின்றனர்.
போராட்டத்தில் கலந்துகொண்ட ஜிம்மி ஒஹாஷ் எனும் 19 வயது இளைஞன், இன்னும் எத்தனை பேரைதான் கொலை செய்வீர்கள்? நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழும் ஒரு எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கிறேன். நாங்கள் யாரையும் ஒடுக்குவதில்லை என்றார்.