கரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் பல முன்னணி நாடுகளின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்டுவருகின்றன. அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர், ஜெர்மனியின் பயோடெக் நிறுவனமான பயோ என்டெக் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் கரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்திற்கு BNT162 RNA என பெயரிட்டப்பட்டுள்ளது. இந்த மருந்தின் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, இறுதிக்கட்ட சோதனையில் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பரிசோதனையில் 18 முதல் 85 வயது வரையிலான 30 ஆயிரம் தன்னார்வலர்கள் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த ஆய்வு வெற்றிகரமாக முடிந்தால், இரண்டு நிறுவனங்களும் அக்டோபர் மாத தொடக்கத்தில் தடுப்பூசியை ஒழுங்குமுறை ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்க முடிவுசெய்துள்ளன. பின்னர், 2020ஆம் ஆண்டின் இறுதியில் மருந்து விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா தடுப்பூசி மருந்தாகத் தயாரிக்கப்பட்ட நான்கு BNT162 RNA தடுப்பூசி மருந்துகளைப் பரிசோதனை செய்ததில், BNT162b1, BNT162b2 ஆகிய இரண்டு மருந்துகள் மட்டும்தான் பாதுகாப்பு, நோய் எதிர்ப்புச் சக்தி அளிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த மருந்துகளாக உள்ளன. தற்போது, இந்த இரண்டு மருந்துகளை உபயோகித்துதான் இறுதிக்கட்ட பரிசோதனை நடைபெறவிருக்கிறது.