முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரில் இணைய ஹேக்கர்கள் தற்போது தங்களின் கைவரிசையைக் காட்டியுள்ளனர். உலகின் முன்னணி பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளிலிருந்து திடீரென்று சம்பந்தமில்லாத ட்வீட்டுகள் வெளியாகின. அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்க அதிபர் தேர்தலின் போட்டியாளர் ஜோ பைடன், தொழிலதிபர் மைக் ப்ளூம்பெர்க், ஜெஃப் பெசாஸ், பில்கேட்ஸ், எலான் மஸ்க் உள்ளிட்ட பலரின் கணக்குளிலிருந்து இந்த போலி ட்வீட்டுகள் வெளியாகியுள்ளன.
அதில், "நீங்கள் குறிப்பிட்ட பிட்காயின் தளத்திற்கு ஆயிரம் டாலர் பணம் அனுப்பினால் இரண்டாயிரம் டாலராக பணத்தை திருப்பி அனுப்புவேன்" எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் ட்விட்டர் நிர்வாகத்தின் கவனத்திற்கு உடனே தெரியவர, இந்த போலி ட்வீட்டுகளை நீக்கி நிலைமை சீர் செய்யப்பட்டது. இந்த விஷமச் செயலில் பிட்காயின் மோசடி பேர்வழிகள்தான் எனக் கருதப்படுகிறது. ஹேக் குறித்த இந்த செய்தி வெளியானதையடுத்து பங்குச் சந்தையில் ட்விட்டரின் பங்குகள் மூன்று விழுக்காடு சரிவைச் சந்தித்தது.
இதையும் படிங்க: பங்குச் சந்தை நிலவரம்: ஊசலாடிய பங்கு வர்த்தகம்