அமெரிக்காவில் அதிபர் தேர்தல் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பரப்புரையில் இரு கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையில், நியூயார்க் காவல் துறை வாகனத்திலுள்ள ஒலிப்பெருக்கியை பயன்படுத்தி "ட்ரம்ப் 2020" என்ற முழக்கமிட்ட காவலரை ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்ய நியூயார்க் காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து நியூயார்க் காவல் துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், " காவல் துறையின் விதிப்படி பணியில் உள்ள காவலர்கள் யாரும் எந்தக் கட்சிக்கு ஆதரவாகும் பரப்புரையில் ஈடுபடக்கூடாது. எனவே, அவரை 30 நாள்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளோம்" என்றார்.
இது குறித்து நியூயார்க் நகர மேயர் பில் டி பிளாசியோ கூறுகையில், "நான் ஒன்றை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன். பணியில் இருக்கும் காவலர் ஒருவர், எந்த ஒரு அரசியல் கட்சியையும் ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரும். இதுபோன்ற நிகழ்வுகளை நிச்சயம் பொறுத்துக் கொள்ள முடியாது" என்றார்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்: அமெரிக்க துணை அதிபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து ஐவருக்கு கரோனா!