அமெரிக்காவில் மினியாபோலிஸ் நகரில் 46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர், கடந்த மாதம் 25ஆம் தேதி காவல் அலுவலரின் கோரப் பிடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தன்னால் மூச்சுவிட முடியவில்லை என்று பலமுறை கதறியும், காவலர் தனது பிடியைத் தளர்த்தாததால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அமெரிக்கா மட்டுமின்றி உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராக அதிகரித்துவரும் வன்முறைகளைக் கண்டித்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் வலுபெற்றுவருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்திலுள்ள போர்ட்லேண்ட் நகரில் நிறவெறிக்கு எதிராக கடந்த 52 நாள்களாக தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. அதன்படி நேற்றிரவு நடைபெற்ற போராட்டத்தில், பெண் ஒருவர் திடீரென்று நிர்வாணமாக சாலையில் அமர்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தை கலைக்க போராட்டக்காரர்களை நோக்கி பெப்பர் குண்டுகளை காவல் துறையினர் சுட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அசராமல் இந்தப் பெண் சாலையில் நிர்வாணமாக அமர்ந்திருந்தார். ஒரு தொப்பி மற்றும் மாஸ்க்கை தவிர அப்பெண் வேறு உடைகளை அணிந்திருக்கவில்லை.
சுமார் 15 நிமிடங்கள் சாலையில் நிர்வாணமாக அமர்ந்திருந்த அப்பெண், எவ்வித காயமுமின்றி போராட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து வெளியேறினார். அப்பெண் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நிறவெறிக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், நிர்வாணமாக நுழைந்த அப்பெண்ணால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: விண்வெளியில் அத்துமீறும் ரஷ்யா - அமெரிக்கா குற்றச்சாட்டு