வெவ்வேறு காலக்கட்டத்தில் ஜோ பைடனின் முன்னோர்களும், கமலா ஹாரிஸின் முன்னோர்களைப் போலவே மெரினா கடற்கரையில் தங்கள் கால் தடங்களைப் பதித்திருக்கலாம். இந்தத் தொடர்பைக் குறித்து அமெரிக்காவின் துணை அதிபராக இருந்தபோது மும்பைக்கு வருகை தந்த ஜோ பைடன், தனது உரையில் குறிப்பிட்டார்.
”1972இல் எனது 29ஆவது வயதில் அமெரிக்க செனட் சபைக்கு தேர்வாகியிருந்த சமயத்தில், பைடன் என்ற பெயரில் மும்பையிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. இந்தியாவில் எனக்கு உறவினர் இருப்பது அப்போதுதான் தெரிய வந்தது” என மும்பையில் பைடன் பேசினார்.
கடந்த 1700களில் பைடன் சந்ததியினர் இந்தியாவில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்ற அமெரிக்காவிலிருந்து வந்திருக்கலாம் என பைடன் தெரிவித்தார். துரதிஷ்டவசமாக, இந்தியாவில் தன்னுடைய முன்னோர்கள் பெருஞ்செல்வத்தைக் குவித்த காலனித்துவ ஆட்சியைக் குறித்து பைடன் அறிந்திருக்கவில்லை.
கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க இந்தியா வர்த்தக கவுன்சிலில் பேசிய ஜோ பைடன்,“தாத்தாவின் தாத்தாவுடைய தாத்தாவின் தாத்தாவுடைய தாத்தா ஜார்ஜ் பைடன், கடந்த 1848ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியின் கேப்டனாக இருந்தார். அவர் இந்தியாவிலேயே வாழ்ந்து இந்தியப் பெண்ணையே திருமணமும் செய்து கொண்டார்” என்றார்.
சென்னையில் வசித்ததாகக் கூறப்படும் ஜோ பைடனின் முன்னோர்களில் ஒருவரான ஜார்ஜ் பைடன், அமெரிக்க தூதரகத்திற்கு அருகிலுள்ள புனித ஜார்ஜ் கதீட்ரலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஜார்ஜ் பைடன் சந்ததியான கிறிஸ்டோபர் பைடன், வில்லியம் பைடன் ஆகியோர் கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றியதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. சகோதர்களான இவர்கள் இளம்வயதிலேயே கேப் ஆப் குட் ஹோப் வழியாக லண்டனுக்கும் இந்தியாவுக்குமான கடினமான பாதையில் பயணித்துள்ளனர் என வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
கேம்பிரிட்ஜ் ஆய்வாளர் டிம் வில்லேசி-வில்ஸி கேட்வே ஹவுஸில் இப்படியாக எழுதுகிறார்; ”மெட்ராஸில் (தற்போது சென்னை) குடியேறிய கிறிஸ்டோபர் பைடன் கடற்படை மற்றும் தொண்டு நிறுவங்களில் கவனிக்கத்தக்க பணிகளைச் செய்து பிரபலமாக இருந்தார்”
வரலாற்று தரவுகளின் படி, கிறிஸ்டோபர்தான் இந்தியாவில் வாழ்ந்ததாகவும், 1858-ஆம் ஆண்டு அவர் உயிரிழந்ததாகவும் அறிய முடிகிறது. சென்னை கத்தீட்ரலில் அவரது கல்லறை அமைந்துள்ளது. தேவாயலய ஹாலில் அவரது நினைவு தகடு உள்ளது.
ஜோ பைடனுடைய முன்னோர்கள் அயர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என அவர் பொதுமக்களிடையே கூறியுள்ளார். ஆனால், இப்போது சென்னையும்கூட அந்தப் பெருமையில் பங்கெடுக்கலாம்.
இதையும் படிங்க:அமெரிக்காவை மீட்டுருவாக்கம் செய்யும் நேரம் வந்துவிட்டது: ஜோ பைடன்