அமெரிக்காவில் கோவிட்-19 தொற்றின் தாக்கம் வேறெந்த நாடுகளையும்விட மிக மோசமாகவுள்ளது. இதுவரை சுமார் எட்டு லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 72,389 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் பொருளாதாரத்தைக் கருத்தில்கொண்டு அமெரிக்காவில் ஊரடங்கை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் பரவலாக எழுந்துவருகின்றன.
இந்நிலையில், ஊரடங்கு தளர்த்தப்படுவது குறித்து முடிவெடுக்க நியூயார்க் மாகாணம் முழுவதும் ஆன்டிபாடி சோதனை நடத்தவுள்ளதாக அம்மாகாண ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார். இந்த வாரம் மூவாயிரம் பேருக்கு வைரஸ் தொற்று குறித்த சோதனை நடத்தப்படும் என்றும் வரும் காலங்களில் இது அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆன்டிபாடி சோதனையில் துல்லியமான முடிவுகள் கிடைக்காது என்பதால் அதை வைத்து ஊரடங்கை நீக்குவது குறித்து முடிவெடுப்பது சரியானதாக இருக்காது என்று அமெரிக்காவின் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோணி ஃபாசி தெரிவித்துள்ளார்.
"ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களை நாம் இழந்துள்ளோம். பலரை இழந்துவருகிறோம். எனவே ஊரடங்கு குறித்து முடிவெடுப்பதற்கு முன் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
இந்தப் பிரச்னை இத்துடன் முடிந்துவிடுவதில்லை. பொதுமக்கள் வைரசால் பாதிக்கப்படுபவர்களுடன் தொடர்பில் இருப்பதைத் தவிர்க்கும் வரை இது தொடரும்.
மத்திய அரசால் தொழில்துறை மீட்டெடுக்க உதவும் திட்டங்களை அறிவிக்க முடியும் என்றால் ஏன் வைரஸ் பரவலை எதிர்த்து முன்னணியில் நின்று போராடும் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், ஆசிரியர்கள் ஆகியோருக்கு உதவக் கூடாது. அவர்களின் பணியை நாம் மறந்துவிடக் கூடாது. அவர்களுக்குக் குறைந்தபட்சம் 50 விழுக்காடு ஊதியத்தைக் கூடுதலாக வழங்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் கோவிட்-19 தொற்று காரணமாக நியூயார்க்கில் 478 பேர் உயிரிழந்துள்ளனர். இது பல வாரங்களாகத் தினசரி ஏற்படும் உயிரிழப்புகளைவிடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடியேற்றத்திற்குத் தடை - அமெரிக்க அதிபர் அறிவிப்பு