கரோனா வைரசால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்தைக் கடந்துள்ளது. அதில் 83 ஆயிரத்து 425 பேர் உயிரிழந்தனர். இதனிடையே கரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கும் மக்கள் அதீத கண்காணிப்பில் உள்ளனர். இந்தக் கண்காணிப்புப் பணிக்காக செவிலியர்களுக்கு கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மவுண்ட் செனாய் சுகாதார நிறுவனம் சார்பாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிக்க கூகுள் நெஸ்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளது. இதனால் கூகுள் நிறுவனமும், மவுண்ட் செனாய் நிறுவனமும் இணைந்து செயல்படவுள்ளன. இதுகுறித்து சுகாதார நிறுவன நிர்வாகி ஸ்ரீவஸ்தவா பேசுகையில்,'' நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளின் கண்காணிப்புப் பணிகளுக்கான தேவை ஏற்பட்டுள்ள நிலையில், கூகுள் நிறுவனத்துடன் கைகோர்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
நோயாளிகளைக் கண்காணிக்கும் போது, எந்தவிதமான பிரச்னைகள் ஏற்படுகிறது என்பதையறிந்து நெஸ்ட் குழுவினர் பணிபுரிந்து வருகின்றனர். இது மருத்துவக் குழுவினரையும், பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாக்க மிகவும் உதவியாக உள்ளது. நெஸ்ட் கேமரா மூலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்காணிக்க, அவர்களின் அறைகளுக்குச் செவிலியர் செல்வதற்கான தேவைக் குறைந்துள்ளது. கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனைவரையும் கண்காணிக்க முடிகிறது.
இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மருத்துவப் பணியாளர்களுக்கு தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன'' என்றார்.
இதையும் படிங்க: ஆப்கன் மருத்துவமனை தாக்கப்பட்டதற்கு ஐநா கண்டனம்!