2020ஆம் ஆண்டையே புரட்டிப்போட்ட கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் முயன்றுவருகின்றனர். கடந்த வாரம், ஃபைஸர் மற்றும் பயோஎன்டெக் இணைந்து உருவாக்கிய கரோனா தடுப்பு மருந்து, 3ஆம் கட்ட மருத்துவச் சோதனையில் 90 விழுக்காடு பலனளிப்பதாக அந்நிறுவனம் அறிவித்தது.
அதைத்தொடர்ந்து, அமெரிக்காவின் மற்றொரு நிறுவனமான மாடர்னா, தனது கரோனா தடுப்பு மருந்து 94.5 விழுக்காடு பலனளிக்கும் வகையில் உள்ளதாக அறிவித்திருந்தது. இந்த இரு தடுப்பு மருந்துகளில் எதேனும் ஒன்று ஒப்புதலுக்கு பின் விரைவில் புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தனது தடுப்பு மருந்தை ரூ.1850 முதல் ரூ.2750 வரை விற்கவுள்ளதாக மாடர்னா நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளுக்கு தடுப்பு மருந்தை 25 டாலருக்கும் குறைவான விலைக்கு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக ஐரோப்பிய ஒன்றிய அலுவலர் தெரிவித்தார்.
இது குறித்து மாடர்னா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் வாம் எஸ் கூறுகையில், "இதுவரை ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை. ஆனால், விரைவில் ஒப்பந்தம் போடப்படும் என்று நம்புகிறோம். நாங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தடுப்பு மருந்தை வழங்க விரும்புகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: அவசர ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ள ஃபைஸர் - விரைவில் கரோனா தடுப்புமருந்து?