அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் உள்ள சிறிய மளிகை கடை ஒன்றில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் சில நாட்களுக்கு முன்பு பொருள் வாங்கச் சென்றுள்ளார்.
பொருட்கள் வாங்கிவிட்டு கடைக்காரரிடம் பணம் கொடுத்துள்ளார். அதனைப் பார்த்து "கள்ளநோட்டாக இருக்குமோ" என்று சந்தேகமடைந்த கடைக்காரர், உடனே காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், ஜார்ஜ் ஃபிளாய்டை அவரது காரிலிருந்து இறக்கி முட்டிபோடவைத்து கையில் விளங்கு மாட்டியுள்ளனர்.
பின்னர், டெரீக் சவ்வின் என்ற காவல் துறை அலுவலர் அவரை சாலையில் படுக்க வைத்து அவரின் கழுத்தில் முட்டியை வைத்து வெகு நேரம் அழுத்தவே, மூச்சுவிட முடியாமல் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த கொடூரச் சம்பவம் பல தரப்பினர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை இனவாதத்துக்கு எதிராகவும், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அமெரிக்காவின் பல மாகாணங்களில் நூற்றுக்கணக்கானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜார்ஜ் ஃபிளாய்டை கொன்ற காவல் அலுவலர் டெரீக் சவ்வின் மீது கொலை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக உயிரிழந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் குடும்பத்தின் வழக்கறிஞர், "சம்பந்தப்பட அத்தனை அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
ஹெனிபின் மாவட்டத்தின் அரசு தலைமை வழக்கறிஞர் மைக் ஃபிரீமேன் கூறுகையில், "மற்ற காவல் துறை அலுவலர்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால், தற்போதைக்கு முக்கியக் குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் என்பதே காவல் துறையினர் நோக்கம்" என்றார்.
இதையும் படிங்க : 'மூச்சு விட முடியல' என்று கதறிய பின்னரும் விடாத போலீஸ் - உயிரிழந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்