வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருடன் பில்கேட்ஸ் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருந்தது தொடர்பாக விசாரணை செய்ய அந்நிறுவனத்தின் வாரிய உறுப்பினர்கள் கடந்த 2020ஆம் ஆண்டு முடிவெடுத்ததாகவும், அந்த விசாரணையின்போது அந்த வாரியத்தில் உறுப்பினராக பில்கேட்ஸ் இருப்பது பொருத்தமாக இருக்காது என பிற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்ததாகவும் வால் ஸ்டீரிட் ஜெர்னல் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரிப்பதற்காக, 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனியார் சட்ட நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவன வாரிய உறுப்பினர்கள் பணியமர்த்தியதை பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்ததாக, வால் ஸ்டீரிட் ஜெர்னல் நேற்று தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், வாரியத்தின் விசாரணை முடிவதற்கு முன்பே, பில்கேட்ஸ் வாரியத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்செய்தி வெளியான பின்பு நேற்று இரவு அவருடைய செய்தித் தொடர்பாளர் அசோசியேட்டேட் பிரஸ் செய்தி நிறுவனத்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், "வாரியத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதற்கும் இச்சம்பவத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. தனது தொண்டு நிறுவனத்தில் கவனத்தைச் செலுத்துவதற்காக கடந்தாண்டு அவர் வாரியத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதத்தின் தொடக்கத்தில், பில்கேட்ஸும் அவரது மனைவியும் விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்ததும், ஆனால் 'மெலினா கேட்ஸ் அறக்கட்டளையை சேர்ந்து நடத்துவோம்' எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி போட்டு கொண்ட பில் கேட்ஸ்!