அமெரிக்காவின் அதிபர் தேர்தல், அடுத்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட, பலர் தங்கள் பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க், பரப்புரைகளுக்காக இதுவரை 120 மில்லியன் டாலரை செலவழித்துள்ளதாக, ஜின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக கலிஃபோர்னியா, டெக்சஸ், ஃபுளோரிடா ஆகிய மாகாணங்களைக் குறிவைத்து அவர் தனது பரப்புரைகளை தீவிரப்படுத்தியுள்ளார்.
மேலும், நவம்பருக்கு பின், ப்ளும்பெர்க் விளம்பரங்களில் செலவு செய்த தொகை, அமெரிக்க அதிபர் தேர்தலில் பங்கேற்கும் அனைத்து பணக்கார (Non Billionaire candidate) வேட்பாளர்களைவிட இரு மடங்கு அதிகம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் மேயர் தேர்தலில் ப்ளூம்பெர்க் போட்டியிட்டபோது அவருக்கு ஆலோசகராக பணியாற்றிய ஜிம் மெக்லாலின், "அதிபர் தேர்தலில் போட்டியிடும் யாரும் இவ்வளவு செலவு செய்து நாங்கள் பார்த்ததில்லை" என்றார். ஆனால், விளம்பரங்களில் அதிகம் செலவு செய்வது, மக்கள் மனநிலையை மாற்ற முடியாது என்றும் சில தேர்தல் ஆலோசகர்கள், தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், ஜனநாயக கட்சியில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் 30 விழுக்காடு வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். இந்த கருத்துக்கணப்பில் ப்ளும்பெர்க் ஏழு விழுக்காடு வாக்குகளுடன் ஐந்தாம் இடத்தையே பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: என் மீதான பதவி நீக்க தீர்மானம் அரசியல் தற்கொலைக்குச் சமம் - அதிபர் ட்ரம்ப்