பல்வேறு நாடுகளில் இன்னும் சில வாரங்களில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பிரிட்டன், பஹ்ரைன், கனடா ஆகிய நாடுகள் ஃபைஸர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் வழங்கியிருந்தது.
இந்நிலையில், அமெரிக்காவிலும் கரோனா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தற்போது அமெரிக்காவைத் தொடர்ந்து மெக்சிகோவிலும் ஃபைஸர் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அடுத்த வாரம் 2.5 லட்சம் கரோனா தடுப்பு மருந்து டோஸ்கள் மெக்சிகோவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபைஸரின் கரோனா தடுப்பு மருந்து இரண்டு டோஸ்களாக வழங்கப்பட வேண்டும் என்பதால் இதன் மூலம் 1.25 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பு மருந்தை அளிக்க முடியும்.
தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் அடுத்த வாரம் தொடங்கப்படும் என்றும், முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மெக்சிகோவில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 11) வரை 12.29 லட்சம் பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும், அவர்களில் 1.13 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக தலைநகர் மெக்சிகோ சிட்டியில் வைரஸ் பரவல் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. அங்கிருக்கும் மருத்துவமனையிலுள்ள படுக்கைகளும் நிரம்பியுள்ளன.
இதையும் படிங்க: அமெரிக்காவில் அடுத்த வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும் பைசர் கரோனா தடுப்பூசி!