சினிமாவில் கற்பனையாக வரும் பயங்கரமான சம்பவங்கள் சில உண்மையாகவே நடைபெற்று மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. ஆனால் சினிமா கற்பனைக்கும் எட்டாத சம்பவம் மெக்சிகோவில் அரங்கேறியுள்ளது.
மெக்சிகோவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஜாலிஸ்கோ மாகாணம் போதைப்பொருள் கும்பல்களின் கூடாரமாகவே இருந்து வருகிறது. அங்குப் போதைப்பொருள் கும்பல்கள், தொழில் போட்டி காரணமாக இரக்கமின்றி பலரைக் கொன்று குவித்து வருகின்றனர். இந்நிலையில் மாகாணத்தின் மிகப்பெரிய பகுதியான குவாடலஜரா நகரில் உள்ள பாழுங் கிணற்றைச் சுற்றி கடும் துர்நாற்றம் வீசுவதை அறிந்த பொது மக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து கிணற்றைச் சோதனை செய்த காவல்துறையினர் மிகப்பெரிய அதிர்ச்சியில் மூழ்கினர். கிணற்றுக்குள் கிடந்த பிளாஸ்டிக் பைகளில் வெட்டப்பட்ட மனித உடல் பாகங்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து அடைந்தனர்.
கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட 119 பிளாஸ்டிக் பைகளில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட 44 பேரின் உடல்களை கண்டுபிடித்துள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட 44 பேரை அடையாளம் காணும் பணியில் தடயவியல் வல்லுநர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்த கொடூர கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது