கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு மசூத் அசார் தலைமையில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றிருந்தது. இதையடுத்து, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு எதிராக இந்தியாவும், உலக நாடுகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன.
அந்த வகையில், ஜநா பாதுகாப்பு கவுன்சிலின் 1267 தடைக் குழுவில் மசூத் அசாரை சர்வசேத பயங்கரவாதியாக அறிவிக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய உறுப்பு நாடுகள் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தது. இதற்கு சீனா தற்காலிக முட்டுகட்டை போட்டது. இந்த விவகாரத்தில் சீனாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது.
இந்நிலையில், இந்த தீர்மானம் பற்றிய முக்கிய கூட்டம் ஜநா பாதுகாப்பு கவுன்சிலின் 1267 தடைக் குழுவில் இன்று நடைபெற்றது. இதில், மசூத் அசாரை சர்வசேத பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது கடந்து 10 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட 4ஆவது தீர்மானம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ட்வீட் செய்த இந்தியாவுக்கான ஐநாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன், மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளான். இம்முயற்சிக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி, என குறிப்பிட்டுள்ளார்.