இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்தியர்களின் தனியுரிமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் கூறி டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளும் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பது குறித்து சிந்தித்துவருவதாக தெரிவித்தன. அதிலும் குறிப்பாக செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்திற்கு டிக்டாக் செயலியை விற்கவில்லை என்றால் அச்செயலிக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
முதலில் டிக்டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. மாறாக இது தொடர்பாக ஆரக்கிள் நிறுவனத்திற்கும்- டிக்டாக் செயலிக்கும் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் வெள்ளை மாளிகைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம் குறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அதிபர் ட்ரம்ப், "இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்னர், தேசிய பாதுகாப்பில் எந்த சமரசமும் இல்லை என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
இந்த ஒப்பந்தம் குறித்து அலுவலர்கள் எனக்கு விளக்குகின்றனர். நான் இது குறித்து முழுமையாக தெரிந்துகொள்ளாமல் எதிலும் கையொப்பமிட தயாராக இல்லை. நான் ஒப்பந்தத்தைப் பார்க்க வேண்டும். இது தொடர்பாக அவர்கள் எங்களுக்கு பெரும் தொகை அளிக்க தயாராகவுள்ளனர்.
ஆனால், அதை நாங்கள் பெறலாமா என்பது தெரியாது. இது குறித்தும்(பணம் பெறுவது) நாங்கள் ஆலோசித்துவருகிறோம்" என்றார்.
இதையும் படிங்க: இந்திய ஆய்வகத்திற்கு 100 மில்லியன் டோஸ் ’ஸ்புட்னிக் V’ விநியோகம்