அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் வசித்து வருகிறார்கள் எட்வர்ட் - கேத்தி தம்பதி . இவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டின் முன் கதவைத் திறந்து வைத்துவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் வீட்டுக்குள் ஏதோ உறுமல் சத்தம் கேட்பது போல் உணர்ந்தார்கள். அதன் பின் வீட்டுக்குள் பார்க்கும் போது மலை சிங்கம் ஒன்று ஹாய்யாக உலாவிக் கொண்டிருப்பதைப் பார்த்துப் பயந்த தம்பதி அலறியுள்ளனர். இதனை எதிர்பார்க்காத சிங்கமும் பயந்து வீட்டில் உள்ள கழிவறைக்குள் தஞ்சம் புகுந்துள்ளது.
இதனை கவனித்த தம்பதிகள், புத்திசாலித்தனமாகக் கழிவறையின் கதவை மூடினர். இதனையடுத்து உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து வீட்டிற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள், கழிவறையின் ஜன்னலை உடைத்து சிங்கத்தைக் குதிக்குமாறு கட்டாயப்படுத்தினர். இறுதியில் மலை சிங்கம் ஜன்னலுக்கு வெளியே குதித்து வீட்டை விட்டு வெளியேறியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : மலைப்பாம்புக்கு உணவளித்து கொடுமைப்படுத்திய விநோதம்!