உலகளவில் கரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கரோனா நிவாரணத்துக்காக, 900 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்ய, அந்த நாட்டு நாடாளுமன்றம் அண்மையில் ஒப்புதல் அளித்தது.
இதனைத் தொடர்ந்து, கரோனா தொற்று நிவாரண மசோதா அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மசோதாவுக்குக் கையெழுத்திட அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து தாமதித்து வந்தார்.
இதுதொடர்பாக டிரம்ப் கூறியதாவது, "இந்த மசோதா முற்றிலும் தேவையற்ற அம்சங்களை கொண்டுள்ளது. இந்த மசோதாவால் வெளிநாடுகள் அதிகளவில் பலன் பெறும். ஆனால் கரோனாவுடன் போராடிவரும் அமெரிக்கர்களுக்கு குறைவான உதவியே கிடைக்கும். எனவே இந்த மசோதாவில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும்" என்று கூறிவந்தார்.
இதன் காரணமாக, வேலையில்லாத லட்சக்கணக்காண அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் உதவித் தொகை மற்றும் பிற நிதி திட்டங்களை செயல்படுத்துவதில் தொடர் தாமதம் ஏற்பட்டுவந்தது. இதைத்தொடர்ந்து, இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபராக புதிதாக தேர்வான பிடன், " பொருளாதார நிவாரண மசோதாவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட மறுப்பதால், லட்சக்கணக்கானவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூட நிதி அனுப்ப முடியவில்லை. ட்ரம்ப் தனது பொறுப்புகளை தட்டிக் கழித்துவருகிறார்" எனக் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், அமெரிக்கர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு, கரோனா தொற்று நிவாரண நிதி வழங்கும் மசோதாவில் அதிபர் டொனால்ட டிரம்ப் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'டொனால்ட் ட்ரம்ப் ஒரு பைத்தியக்காரர்'- ஹாசன் ரூஹானி